லுபுக் செகிந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மேலும் இருவருக்கு கிருமித் தொற்றா?

வதந்திகளை நம்பாதீர்

சுங்கைபட்டாணி-

லுபுக் செகிந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி குறித்து வாட்ஸ்அப்பில் பரவும் வதந்திகளையும் அவதூறு செய்திகளையும் நம்ப வேண்டாம் என கோலமுடா மாவட்ட போலீஸ் நிலையத்தின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த ஏஎஸ்பி. கந்தன் செல்வராஜு கேட்டுக் கொண்டார்.

இந்தப் பள்ளியில் பாலர் வகுப்பைச் சேர்ந்த ஆசிரியை மற்றும் அங்கு பயின்ற இவருடைய மூன்று பிள்ளைகளுக்கு மட்டுமே கோவிட்-19 தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்டு 13ஆம் தேதி இந்த நால்வருக்கும் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டபின், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று முன்தினத்தோடு 14 நாட்கள் கடந்துவிட்டன.

இந்த நிலையில் இதே பள்ளியில் மேலும் இருவருக்கு கோவிட்-19 தொற்று பரவியிருப்பதாக வாட்ஸ்அப்பில் வெளியான செய்தியில் உண்மையில்லை என்று அவர் தெரிவித்தார்.

இப்பள்ளியின் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என 102 பேருக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் கோவிட்-19 மருத்துவப் பரிசோதனையை நேற்று நடத்தினர். இதில் யாருக்கும் புதிதாகத் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியானது.

செப்டம்பர் 8ஆம் தேதி வரை இந்தப் பள்ளிக்கூடத்தை மூடும் ஆணையையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. ஆகவே, இப்பள்ளி குறித்து சிலர் பரப்பி வரும் வதந்திகளை பெற்றோர் நம்பக்கூடாது. உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள அவர்கள் போலீஸ் நிலையத்தையும் கல்வி இலாகாவையும் சுகாதார இலாகாவையும் தொடர்பு கொள்ளலாம் என்று ஏஎஸ்பி கந்தன் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here