கிள்ளான், செப். 2 – அடுத்தாண்டு சிலாங்கூரில் நடைபெற உள்ள மலேசியா விளையாட்டுப் போட்டிகள் (SUKMA 2026) முன்னிட்டு, விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷா ஆலம் செக்சன் 13 பகுதியில் உள்ள டாருல் ஏஹ்சான் நீச்சல் மையம், சுபாங் துப்பாக்கி சுடும் மைதானம், பாண்டமாரான் விளையாட்டரங்கம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மேம்படுத்தும் பணிகள் கவனத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன என விளையாட்டு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
“தற்போது மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு வசதிகள் அனைத்தும் திட்டமிட்டபடி மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஊராட்சி மன்றங்களும் இதில் தங்களது பங்கைச் சிறப்பாக நிறைவேற்றி வருகின்றன. இந்தப் பணிகள் மார்ச் 2026-க்குள் முடிவடையும் என்று நம்புகிறோம்,” என அவர் தெரிவித்தார்.
இந்த தகவலை அவர் நேற்று இங்குள்ள KSL எஸ்பிளனேட் மாலில் நடைபெற்ற 2025 சிலாங்கூர் மாநில பள்ளிகள் சீலாட் வெற்றியாளர் போட்டி நிகழ்வின் போது பகிர்ந்தார்.
SUKMA 2026 போட்டி ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து பாரா SUKMA செப்டம்பர் 5 முதல் 14 வரை நடைபெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜூலை 22ஆம் தேதி அறிவித்திருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா, சிப்பாங் அனைத்துலக பந்தயத் தடத்தில் (Sepang International Circuit) நடைபெற உள்ளது.



















