ரூ.300 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்

பினாமி பெயர்களில் வாங்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித் துறையினர் முடக்கியுள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்த வழக்கில் சசிகலா பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தநிலையில், சசிகலா தரப்பினர் 2003-2005ம் ஆண்டுகளில் வாங்கிய சொத்துக்களை வருமானவரித் துறையினர் முடக்கியுள்ளனர். சென்னை போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியபோது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பினாமி பெயரில் சசிகலா தரப்பினர் சொத்துக்கள் வாங்கியது தெரியவந்திருப்பதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வருமானவரித் துறையின் பினாமி தடுப்புப் பிரிவு சட்டத்தின்கீழ் தற்போது, ரூ.300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பினாமி பிரமுகர்களுக்கும் அந்த சொத்துக்களை பத்திரப்பதிவு செய்த அலுவலகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பினாமி நிறுவனங்களை நடத்தும் 2 நபர்களின் பெயர்களில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் சசிகலாவின் உறவினர்கள்.

இந்த நிறுவனம் பெயரில் வாங்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள இடங்களும் தற்போது முடக்கப்பட்ட சொத்தில் அடங்கும். சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டுக்கு அருகே வாங்கப்பட்ட நிலமும் இந்த முடக்கத்தில் அடங்கும்.

2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு காலக்கட்டத்தில் 9 இடங்களை சுமார் ரூ.1,600 கோடி அளவுக்கு வாங்கியிருக்கிறார்கள். பெரம்பூரில் பிரபல சினிமா தியேட்டர், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பிரபல ரிசார்ட் உள்ளிட்ட 9 சொத்துக்கள் இருப்பதையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், இதுதொடர்பாக சசிகலா தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இதேபோல், பினாமி சொத்துக்கள் தொடர்பாக சசிகலா தரப்பினருக்கு ஏற்கனவே ஒருமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டபோது, ‘தங்களுக்கும் அந்த சொத்துகளுக்கும் தொடர்பில்லை’ என்று சசிகலா தரப்பினர் சொல்லிவிட்டனர்.

இந்தநிலையில், 2-வது முறையாக தற்போது வேறு சில சொத்துக்களை குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here