தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகளை நீக்கலாம்

முஹிடினுக்கு மகாதீர் எழுதியக் கடிதம்

கோலாலம்பூர் –

தீவிரவாதக் கும்பல்கள் பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்க்க வேண்டாம் என்று அப்போதைய உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு கடிதம் எழுதியதை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது உறுதிப்படுத்தினார்.

எனினும் நான் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக கடந்த வாரம் முதல் வைரலான கடிதத்தை மறுக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
நான் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை. ஏனெனில் அவர்களின் பிரச்சினை இலங்கையில் நடந்ததே தவிர நாம் அதில் சம்பந்தப்படவில்லை.

மலேசியாவில் அவர்கள் தீங்கான செயல்களைச் செய்யாதபோது நாம் அத்தகைய நடவடிக்கையை (அவர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது) எடுக்க வேண்டியதில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

ஒருவேளை அவர்கள் நிதி வசூல் செய்திருக்கலாம். முன்புகூட அவர்கள் நிதி வசூலைச் செய்திருக்கின்றார்கள் என்று அவர் புத்ராஜெயாவில் நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் நேற்று கூறினார்.

இலங்கை தீவிரவாத இயக்கமாக விடுதலைப்புலிகளைப் பட்டிலிடாதபோது நாம் அவர்களைத் தீவிரவாதப் பட்டியலில் சேர்ப்பதற்கு காரணம் ஏதும் இல்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி துன் மகாதீர், டான்ஸ்ரீ முஹிடினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட 12 பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

இலங்கை உள்நாட்டுப் போரில் அந்த நாட்டு ராணுவத்தால் வீழ்த்தப்பட்ட பிறகு 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதால் இந்தக் கைது நடவடிக்கை குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் அந்த 12 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன. தீவிரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை விலக்கும் வழக்கு மீதான சீராய்வு செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தீவிரவாத இயக்கம் எனப் பட்டியலிடப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் தலைவர்களை மலேசியா ஏற்றுக் கொள்வது ஏன் எனவும் துன் மகாதீர் அந்தக் கடிதத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆயினும் தீவிரவாத இயக்கமாக ஹமாஸ் இயக்கத்தை நான் தனிப்பட்ட முறையில் கருதுவதாக என்னுடைய கருத்து பொருள்படாது என்று நேற்றைய நிருபர்கள் கூட்டத்தில் அவர் சொன்னார்.

ஹமாஸ் தீவிரவாத இயக்கம் என நான் கூறவில்லை. ஆனால் அமெரிக்கா அதனைத் தீவிரவாத இயக்கமாகப் பட்டியலிட்டுள்ளது. ஹமாஸ் இயக்கத்தினர் தீவிரவாதிகள் என உலகமும் கூறுகிறது என்றார் அவர்.

ஹமாஸ் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே என்னுடைய நண்பர்தான். அவர் என்னுடைய நண்பர் என்பதால் ஹமாஸ் தலைவரை நான் சந்தித்தேன்.

ஆகவே நான் அவரைத் தீவிரவாதி என அழைக்க முடியாது. பிரச்சினைகளை நாம் தேட வேண்டியதில்லை எனவும் துன் மகாதீர் கூறினார். – மலேசியா கினி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here