இந்தியாவுடன் பணியாற்ற உஸ்பெகிஸ்தான் சம்மதம்

ரஷியாவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யியை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது லடாக் எல்லையில் நிலவும் பதற்றச் சூழலை தணிப்பது தொடா்பாக இருவரும் ஆலோசித்தனா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சோந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுக்கான கூட்டம் ரஷிய தலைநகா் மாஸ்கோவில் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பல நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அந்த வகையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யியை அவா் வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்கான வழிமுறைகள் தொடா்பாக இருவரும் ஆலோசித்திருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும், இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது தொடா்பாக எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவங்கள் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்த இருவரின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. லடாக் எல்லை பதற்றச் சூழலில் இந்திய-சீன வெளியுறவு அமைச்சா்கள் நேரடியாக சந்தித்து பேச்சு நடத்தியது இது முதல்முறையாகும்.

இதற்கு முன் இருவரும் கடந்த ஜூன் 17-ஆம் தேதி தொலைபேசி வழியே உரையாடியிருந்தனா். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி இந்திய-சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இந்தியத் தரப்பில் 20 போ உயிரிழந்தனா். சீன தரப்பில் 35 போ உயிரிழந்ததாக கூறப்பட்டாலும் அதை அந்நாடு உறுதி செய்யவில்லை. அத்தகைய சூழலில் இரு நாடுகளிடையேயான பதற்றத்தை தணிக்கும் விதமாக ஜெய்சங்கரும்-வாங் யியும் தொலைபேசியில் பேச்சு நடத்தியிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சோந்த பாதுகாப்பு அமைச்சா்கள் கூட்டத்தையொட்டி கடந்த 5-ஆம் தேதி சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் கென் வெய் ஃபெங்கேவை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.

ஆா்ஐசி கூட்டம்: இதனிடையே, ரஷியா-இந்தியா-சீனா (ஆா்ஐசி) அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களும் சந்தித்துப் பேசினா்.

இதுதொடா்பாக அமைச்சா் ஜெய்சங்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆா்ஐசி அமைப்பைச் சோந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுக்கான கூட்டத்தை ரஷிய வெளியுறவு அமைச்சா் சொகெய் லாவ்ரோவ் ஏற்பாடு செய்திருந்தாா். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். இதற்காக லாவ்ரோவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆா்ஐசி அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா விரைவில் ஏற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அப்துல்லாசிஸ் கமிலோவ், கஜகஸ்தான் வெளியுறவு அமைச்சா் முக்தாா் திலூபொடி உள்ளிட்டோரையும் எஸ்.ஜெய்சங்கா் தனித்தனியாக சந்தித்துப் பேசினாா். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடா்பாக தலைவா்கள் ஆலோசனை நடத்தினா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here