பாரதிராஜா தலைமையில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகம், சென்னை – அண்ணா சாலையில் திறக்கப்பட்டது. பின்னர் அங்கு சங்கத்தின் செயற்குழுக் கூட்டமும் நடைபெற்றது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகரன், தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா, திரைப்படத் தயாரிப்புத்துறை சுமுகமான முறையில் செல்ல வேண்டும் என்பதே நோக்கம் என கூறினார்.
மேலும், நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து பற்றி கேள்விக்கு பதிலளித்த அவர், சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார் என்று கூறிவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார்.
முன்னதாக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், நீட் போன்ற ‘மனுநீதி’ தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது என கூறியிருந்தார்.
மேலும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அவர் கூறியிருந்ததாக எதிர்ப்பு எழுந்திருந்த நிலையில், அவருக்கு முன்னாள் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.