பீஹாரில் வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்.,18) திறந்து வைக்க உள்ளார்.பீஹாரில் கோசி ஆற்றுக்கு குறுக்கே பிரமாண்ட ரயில் பாலம் கட்டும் திட்டத்திற்கு 2003 – 2004 ஆண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
516 கோடி ரூபாய் மதிப்பில் 1.9 கி.மீ. நீளத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த கோசி ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் இந்த பாலம் திறக்கப்படுவது பீஹார் வரலாற்றில் சிறப்புமிக்க தருணமாகும். இதன்மூலம் 86 ஆண்டு கனவு நிறைவேற உள்ளது. பிராந்திய மக்களின் காத்திருப்புக்கு பலன் கிடைக்க உள்ளது.
இந்த திட்டத்துடன் மேலும் 12 ரயில் திட்டங்களையும் பிரதமர் அறிமுகம் செய்துவைக்க உள்ளார்.பீஹாரில் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் கடந்த சில நாட்களில் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்து உள்ளார்.