மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையை சேர்ந்த மனீஷ் மிஸ்ரா தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அதனால் உயிர் பிழைக்கமாட்டேன் என்று உடனடியாக இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் பதற்றம் அடைந்த அவரது மனைவி தனது கணவரின் செல்போனுக்கு உடனடியாக தொடர்பு கொண்டார். ஆனால், செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன் பின் மிஸ்ரா வீட்டுக்கு வரவே இல்லை.
அதனைத் தொடர்ந்து மிஸ்ராவின் மனைவி தனது கணவரை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார் . இந்த புகாரையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் மிஸ்ராவின் செல்போன் சிக்னல் கடைசியாக கிடைத்த பகுதியில் ஆய்வு செய்தனர் . அங்கு மிஸ்ராவின் பைக் , ஹெல்மெட் இருப்பதை கண்டுபிடித்தனர் .
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் காரில் சென்ற காட்சி இருந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் மிஸ்ரா மத்திய பிரதேசத்திற்கு சென்றதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரை பிடிப்பதற்காக விரைந்த போலீசார் இந்தூரில் அவர் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இருவரையும் மும்பை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது தான் கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்த மிஸ்ரா மனைவியிம் கொரோனா என்று கூறிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.