கொரோனா ஊரடங்கால் கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர்கள் உட்பட 66 லட்சம் பேரின் வேலை பறிபோய்விட்டதாக அதிர்ச்சிகர தகவல் வௌியாகியுள்ளது. அதோடு, கடந்த 4 ஆண்டு வேலை வாய்ப்பு பலன்கள் இந்த 4 மாதங்களில் போய்விட்டதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் ஊரடங்கால் பாதிக்கப்படாத துறைகளே இல்லை. அந்த அளவுக்கு ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர்.
கவுரவமான பணி செய்தவர்கள் தள்ளுவண்டியில் பழம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், வேலை வாய்ப்பு மற்றும் வேலை இழப்பு தொடர்பாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் மேற்கண்ட 4 மாதங்களில் நாடு முழுவதும் 66 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. இதில், சாப்ட்வேர் இன்ஜினியர்கள், டாக்டர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அக்கவுண்டன்ட், ஆய்வு பணிகளில் உள்ளோர் அடங்குவர்.
இன்ஜினியர் உள்ளிட்ட தொழில் ரீதியாக கல்வி பெற்றவர்களுக்கு எப்போதுமே வேலை வாய்ப்பு கிடைக்கும். 2019ம் ஆண்டு மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கண்ட ஒயிட் காலர் பணி எனப்படும் அலுவலக பணியில் 1.88 கோடி பேர் வேலை பெற்றதே அதிக எண்ணிக்கையாக இருந்தது. இது கடந்த மே ஆகஸ்ட் காலக்கட்டத்தில் 1.22 கோடியாக குறைந்து விட்டது.
2019 செப்டம்பர் டிசம்பர் மாதத்தில் 1.87 கோடி பேரும், இந்த ஆண்டு ஜனவரி – ஏப்ரலில் 1.81 கோடி பேரும், 2016 ஜனவரி – ஏப்ரலில் 1.25 கோடி பேரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என சிஎம்ஐயியின் 4 ஆண்டு கால புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது. பள்ளி, கல்லூரிகள் இயங்காததால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். இதுபோல், இன்ஜினியரிங், டாக்டர் படித்தவர்களுக்கும் கூட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், கிளர்க் போன்ற பணிகளில் உள்ளவர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. தொழில்துறை வேலை வாய்ப்பு ஆய்வில் சுயதொழில் முனைவோர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் 50 லட்சம் பேர் பாதிப்பு
அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு அடுத்ததாக தொழிற்சாலைகளில் மிக அதிகம் பேர் வேலை இழந்துள்ளனர். கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை சுமார் 50 லட்சம் பேர் வேலை இழந்து விட்டனர். இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குதான் அதிக பாதிப்பு. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இத்துறையில் வேலை வாய்ப்பு 26 சதவீதம் சரிந்து விட்டது என சிஎம்ஐசி தெரிவித்துள்ளது.