புற்றுநோயை வெல்வோம்

இன்று ‘ரோஜா நாள்…

இந்த நாளைப் புற்றுநோயுற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும் நாளாக உலகம் நினைவு கூர்கிறது.

இன்று மலரும் ரோஜா மலர் தன் மணத்தால், அழகால் காண்பவருக்கு மகிழ்வூட்டுவது போல் வாழும் நாளில் பிறருக்கு நன்மையும், மகிழ்வும் தந்து வாழ வேண்டும் என்பதையே சொல்கிறது. நாளை உதிர்வது இயற்கை. ஆனால், அதை நினைத்து, வாழும் நாளைத் துயரமாக்காதே என்பதை இந்த நாள் உணர்த்துகிறது. ஆனால் நாள்கணக்கில், வாரக்கணக்கில் அழகுடன் சிரிக்கும் மொட்டவிழாத ரோஜா மலர்கள் உருவாக்கப்படும் காலம் இது. அவற்றைப் போல நீங்களும் நீண்டகாலம் மகிழ்வுடன் வாழலாம் எனும் நம்பிக்கைச் செய்தி சொல்லும் நாள் என இதற்குப் புதிய பொருளும் கொள்ளலாம்.

உலகம் கொரோனா அச்சத்தில் உறைந்து கிடக்கிறது. ஏன், எப்படி இந்த நோய் வருகிறது, என்ன மருந்து, என்ன தடுப்பு மருந்து, எத்தனை நாள் வாழ்வர் என்கிற எதையும் உலக சுகாதார நிறுவனம்கூட உறுதியுடன் கூற முடியாத, நித்திய கண்டம் பூரண ஆயுசு என உலகம் நாள்களைக் கடத்திக் கொண்டுள்ளது.

புற்றுநோய் என்று சொன்னால் கேட்கவும், அஞ்சி விலகி ஓடி விலக்கி வைத்த காலம் அல்ல இது. மனிதனை மனிதன் பார்க்காமல், நெருங்காமல், பேசாமல், விலகியும், விலக்கியும் வாழ அரசே வலியுறுத்தும் கொடிய கரோனாவுடன் ஒப்பிடும்போது தடுப்பு மருத்துவம், பூரண குணம் கொண்ட புற்றுநோய் அச்சம் தரும் மரண நோயல்ல, தொற்றும் நோயுமல்ல.

புற்றுநோயை வராமல் தடுக்கும் வாழ்வு முறை உண்டு. துவக்கத்தில் கண்டறியும் அதிநவீனப் பரிசோதனைகள் உண்டு. முற்றாகக் குணப்படுத்தும் மருத்துவ முறைகளும் உண்டு. ஆரோக்கியமான புதிய வாழ்வுக்கான வழிகாட்டுதல் உண்டு என மருத்துவ உலகம் புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

முன்னோடிகள்

தேவதாசி முறையை, கல்வி மறுப்பு, ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத் தனம் எனும் பல சமூக நோய்களை ஒழிக்கப் போராடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, புற்றுநோய்க்கான மருத்துவம் பெறுவதற்கான அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை 1954 ஜூன் மாதம் 18ம் தேதி துவங்கினார்.

ரேடியத்தைப் பிரித்து, அதைத் தன் மீதே பரிசோதித்து, புற்றுநோய் போக்கும் கதிர்வீச்சுச் சிகிச்சைக்கு வித்திட்டவரும் மேரி கியூரியெனும் ஒரு பெண் அறிஞரே. அதற்கு நன்றிக்கடனாகத் தானோ என்னவோ, பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் போன்றன நூற்றுக்கு நூறு குணமாக்கப் படுகிறது.

புற்றுநோய்க்கு எதிரான மருத்துவ, சமூகப் போராட்டத்திலும், இன்று பெண்கள் பலர் முன்னிற்க காண்கிறோம். நூறு வயதை நெருங்கும் முதுமையிலும் துடிப்புடன் செயல்பட்டு வரும் டாக்டர் சாந்தா, இளம் புற்றுநோய் மருத்துவர்களுக்கு நம்பிக்கை ஒளிவிளக்காக வழிகாட்டி வருகிறார். அழகுசாதன அடிமைகளாக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், இளம் பெண்களில் சிலர் முடியற்ற தலையுடன் காட்சி தரும் புகைப்படங்களைப் பெருமையுடன் வெளியிடுவதை அவ்வப்போது ஏடுகளில் பார்க்கிறோம். கோவிலுக்கு முடியிறக்கிய பெண்கள் இன்று, கீமோதெரபியால் முடிகொட்டிப் போன சகோதரிகளுக்கு, முடிக்கவசம் தர முடி தானம் செய்யும் புதுமையைச் செய்து வருகின்றனர்.

மார்பகப் புற்றுநோயிலிருந்தும், கருப்பைப் புற்றுநோயிலிருந்தும் விடுதலை பெற்ற பெண்கள் தமது போராட்ட வெற்றி வரலாற்றை நூலாக்கிப் பெண்ணினத்திற்கே நம்பிக்கையூட்டி வருவதையும் காண்கிறோம்.

புற்றுநோய்க்கான மருத்துவத்தின் முன்னேற்றம் மட்டுமின்றி, புற்றுநோய்க்கான சிகிச்சைகள் அனைத்தும் பெற்றபின், அவர்களுக்கான கவனிப்பை வழங்கும் HOSPICE எனும் மறுவாழ்வுக் காப்பகங்கள் அதிகளவில் துவக்கப்பட்டு வருகின்றன.

புற்றுநோயாளிகளை வீட்டிலிருந்தே கனிவாகக் கவனிப்பு, வலி போக்கல் போன்று புதிய மருத்துவ அணுகுமுறையை வழங்குவதில் கேரளம் உலகின் முன்னோடியாக வளர்ந்து வருகிறது. அதில் உள்ளூர் இளம் பெண்கள் பெரும் பங்கேற்று சேவைகளை செய்து வருகின்றனர்.

வாழும் வரை போராடு

மரணம் நம் பிறப்புடன் பிறக்கும் வாழ்வின் மறுபக்கம். இதை மறந்து மரணமில்லா பெருவாழ்வைப் பெற்று சிரஞ்சீவியாக வாழ விரும்புவதே வேதனைகளுக்குக் காரணம். மரணமில்லாத வீட்டிலிருந்தே கடுகு வாங்கி வா என்ற புத்தரின் போதனையின் சாரம் புரியாமல் இன்றும் அலைகிறோம். எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதல்ல, எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம் என்பதை உணர்ந்து வாழும் கலை கற்போம்.

தெரிபாக்ஸ் என்கிற கனடாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் தனது கால் எலும்பில் புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெற்றார். அமெரிக்காவிலேயே OSTEO CLARLOMA என்ற அந்த நோய்க்கான மருத்துவம் எதுவும் இல்லாத காலம் அது. தனது ஒரு கால் நீக்கப்பட்ட நிலையிலும், அவர் செயற்கைக் காலுடன் கனடாவின் ஒரு மூளையிலிருந்து, மறுமுனைக்கு 3000 கிலோ மீட்டர் ஓட்டத்தைத் துவக்கினார். தனக்கு மருத்துவம் இல்லை என்ற நிலை போக்கி எலும்புப் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி மையத்தை உருவாக்க நிதி திரட்டுவதே அவனது ஓட்டத்தின் லட்சியமாக இருந்தது. தனது லட்சிய ஓட்டத்தின் இடையிலேயே மரணம் அவனை அணைத்துக் கொண்டது. லட்சியவாதிகள் சாகலாம். ஆனால் லட்சியங்கள் சாவதில்லை. அவனது மரணத்திற்குப் பின்னும் நிதி குவிந்தது, ஆராய்ச்சி மையம், புதிய மருந்துகள் உருவாக்கப்பட்டன. மருத்துவமற்ற நோய்க்கான விதையாக அவன் தன்னை விதைத்துக் கொண்டான்.

இயற்கையைக் காப்போம்… புற்றுநோயை வெல்வோம்.

மருந்தென வேண்டாம் என நமது தமிழ்முனி வள்ளுவர் சொல்கிறார். வாழும் வாழ்வு சரியானால் நோய்களின் வாய்ப்புகள் அரிது. காடுகளை அழித்தோம். காடுகளிலிருந்த கொசுக்கள் நாட்டுக்குள் புகுந்து மலேரியா தந்தன. இயற்கை அழிப்பே கரோனாவுக்கும் காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். அணுவுலைகள், மாசுபடுத்தும் ஆலைகள், கரிப்புகை கக்கும் கார்கள், களங்கப்பட்ட தண்ணீர், ரசாயனங்கள் இவையே புற்றுநோய்க்கும், மலட்டுத்தன்மைக்கும் காரணம் என்கின்றனர். முதலாளித்துவம், பேராசைப் பொருளாதாரம், எதை இழந்தும் லாபம் எனச் சில மைதாஸ்களை உருவாக்கி வருகிறது. சிலர் வாழப் பலர் அழிக்கப்படுவதைக் காண்கிறோம். நிம்மதியற்ற மரண நோய்களுக்குக் காரணமான பேராசைப் பொருளாதாரம் ஒழிக்கப்படுவதே முதல் தேவை.

நிதியை ஒதுக்குவோம்

நமது நாடு தனது நிதியில் மூன்றில் ஒரு பங்கை ராணுவம், ஆயுதம் ஆகியவற்றிற்கும், மாற்றொரு பங்கை அரசுத் துறை பணியாளர்களுக்குச் சம்பளமாகவும் தந்து, மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கையே மக்கள் நலனுக்குச் செலவிடுகிறது. அதிலும் 1.25 விழுக்காடு உள்நாட்டு உற்பத்தியை மருத்துவத்திற்கு ஒதுக்குகிறது. நாட்டின் 80 விழுக்காடு மருத்துவம் தனியார் லாபநோக்கு மருத்துவத்தாலேயே வழங்கப்படுகிறது. இதில் அரசின் பங்கு வெறும் 20 விழுக்காடு மட்டுமே. இதனால்தான் கரோனா பாதிப்பில் இந்தியா உலகின் இரண்டாம் பெரும் பாதிப்பு நிலைக்கு உள்ளாக்கியுள்ளது. மருத்துவத்திற்கான ஒதுக்கீட்டை அரசு இரட்டிப்பாக்கிவிட்டால் போதும், அரசு மருத்துவமனைகளை தனியார் மருத்துவமனைகளைவிடச் சிறப்பாக்கிவிட முடியும். ஏன் நடக்கவில்லை, மக்கள் கேட்கவில்லை. ஜனநாயக நாட்டில் நல்லொரின் மெளனமே பெரும் தேசத்துரோகமாகும்.

கூட்டு மருத்துவம் வளர்ப்போம்

நவீன அலோபதி மருத்துவத்துடன் ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி எனப் பிற மருத்துவ முறைகளை இணைத்தால்தான் கரோனாவை வெல்ல முடியும் என்கிறது நமது அனுபவம். பல ஆயிரம் கால மனித அனுபவ அறிவின் எந்தப் பங்களிப்பையும் ஒதுக்குவது, மதவெறி போன்ற பயனற்ற அழிவேயாகும். அலோபதி மருத்துவத் துறையின் பேராசிரியர் ஹெக்டே, கதிர்வீச்சு மருத்துவத்தில் 60 ஆண்டு கால அனுபவம் பெற்ற டாக்டர் மாத்யூ போன்றோர் இந்தக் கூட்டு மருத்துவமுறையே நன்மை பயக்கும் என்கின்றனர். ஆனால், அதற்கு எதிர்ப்பும், அச்சுறுத்தலும் எழுவதைக் காண்கிறோம். மிகை நாடி மிக்க கொளல் எனும் தமிழின் அறிவுறுத்தலை ஏற்பதே பயன் தரும்.

கூடிப் போராடுவோம்

ஏற்றத்தாழ்வு மிகுந்த சமூகத்தில் அரசை மட்டும் முழுமையாக நம்பியிராமல், சமூகத்தில் உயர்ந்த வசதி பெற்றோர், தமது சிறிய சிறிய பங்களிப்பின் மூலம் மக்கள் மருத்துவமனைகளை உருவாக்க முன்வர வேண்டும். தென் தமிழகத்தில் மூன்றரை லட்சம் பீடித் தொழிலாளர்கள் உள்ளனர். பிற்பட்ட, சிறுபான்மைச் சமூகத்தினரான அவர்களே புற்றுநோயால் பெரும் அவதிப் படுபவர்களாக உள்ளனர். இவர்களின் உரிமைக்குப் போராடுவது மட்டுமல்ல. இவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க புகைக்காத வாழ்வுமுறையைப் போதிப்பதும், இவர்களின் பங்களிப்புடன் புற்றுநோய்க்கான இலவசச் சிகிச்சை பெற மக்கள் மருத்துவமனைகளை உருவாக்குவதை தொழிற்சங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்குத் தொழிலதிபர்களும், வசதி பெற்றோரும் சி.எஸ்.ஆர். மூலம் உதவ முன்வர வேண்டும்.

நம்பிக்கைக் குழுக்கள்

குடியால் பாதிக்கப்பட்டோருக்கு நம்பிக்கையூட்டி புதிய வாழ்வு பெற வழிகாட்டும் சேவையை சென்னை ரங்கநாதன் அறக்கட்டளையினர் உலகம் முழுவதும் AA எனும் குடியை நிறுத்தியோர் குழுக்கள் மூலம் உதவி வருகின்றன. இதுபோல புற்றுநோயிலிருந்து விடுதலை பெற்றோர், மருத்துவர்கள், சமூக சேவையாளர்களுடன் கூடி நம்பிக்கைக் குழுக்களை உருவாக்கி வழிகாட்டுவதும், உதவுவதும் பெரும் பலனைத் தரும்.

புற்றுநோயை வெல்வோம்

இந்த ‘ரோஸ் டே’ புற்றுநோயாளிகளின் நலனைச் சிந்தித்து, நம்பிக்கையூட்டும் ஒரே நாளாகக் கழிந்து போகாமல், தொடர்ந்து புற்றுநோய் விழிப்புணர்வு, வழிகாட்டுதல் முறைகள், வாழ்வுமுறை மாற்றம், கூட்டு மருத்துவம், மக்கள் மருத்துவமனைகள் உருவாக்கம், நம்பிக்கைக் குழுக்கள் உருவாக்கம் என அனைத்தையும் ஆண்டு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ள உறுதியேற்கும் நாளாக்குவோம். புற்றுநோயை வெல்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here