ஜி.வி.பிரகாஷை பின் தொடரும் சர்வதேச பிரபலம்

‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ என இசைக் களத்தில் அசுரப் பாய்ச்சலில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், இப்போது ‘கோல்ட் நைட்ஸ்’ ஆல்பத்தின் மூலம் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் கால்பதித்து புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

‘கோல்ட் நைட்ஸ்’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடலை சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். இந்தப் பாடல் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். மேலும் இது ஜி.வி.பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல்.

ஜி.வி. மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜி.வி.பிரகாஷ் செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷின் சொந்த ஸ்டூடியோவில், யெஹோவாசன் அல்காரால் கலவை (மிக்சிங்) செய்யப்பட்ட ‘ஹை அண்ட் ட்ரை’ பாடல் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர் ராண்டி மெரில் என்பவரால் மாஸ்டரிங் செய்யப்பட்டது. இவர் அடெல், டெய்லர் ஸ்விஃப்ட், கேடி பெர்ரி, மரூன் 5 உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.

எலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்ச்சிகளுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும். ஒரே நேரத்தில் காதலனின் அரவணைப்பிலும் அதே நேரம் குளிர்ச்சியான இரவில் தனிமையில் இருப்பது போலவும் பிரிந்து சென்ற காதலர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை உருவகப்படுத்திச் சொல்கிறது.

இந்த ஆல்பத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் ‘ஹை அன்ட் ட்ரை’ பாடலைக் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஜி.வி.பிரகாஷை டிவிட்டரில் பின் தொடர ஆரம்பித்துள்ளார். இது ஜி.வி.ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தேதி, இடம் உள்ளிட்ட விவரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here