எத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க?

”கால மாற்றத்துக்கு ஏற்ப, ஐக்கிய நாடுகள்சபையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஐ.நா., வின் முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் இருந்து, இந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள்,” என, ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.ஐ.நா., பொதுச் சபையின், 75ம் ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக, இந்த கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்காமல், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்று, பேசி வருகின்றனர்.தலைவர்கள், தங்கள் உரையை முன்கூட்டியே, ‘வீடியோ’ வில் பதிவிட்டு அனுப்பி வைக்கின்றனர். இந்த வீடியோ, கூட்டத்தின் போது ஒளிபரப்பப்படுகிறது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:ஐ.நா.,வின் நிறுவன உறுப்பினர்களில், இந்தியாவும் ஒன்று என்பதில் பெருமைப்படுகிறோம், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில், 130 கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், அவர்களது பிரதிநிதியாக பங்கேற்கிறேன்.கடந்த, 75 ஆண்டுகளில், ஐ.நா., அமைப்பு, பல சாதனைகளை செய்துள்ளது. அதே நேரத்தில், ஐ.நா., சபையின் பணிகளைப் பற்றி தீவிரமாக ஆராய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டும் நிகழ்வுகளும் உள்ளன.ஐ.நா., சபை உருவாக்கப்பட்ட நோக்கம், இந்திய சிந்தனைகளுடன் இணைந்தது. இந்த உலகையே, ஒரு குடும்பமாக பார்ப்பது, எங்கள் கலாசாரம்.பயங்கரவாதம் உட்பட சர்வதேச பிரனைகளில், ஐ.நா., வின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது என கூற முடியுமா?

கடந்த சில மாதங்களாக, உலகம் முழுவதும் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடி வருகிறது. தொற்று நோய்க்கு எதிரான இந்த போராட்டத்தில், ஐ.நா., பங்கு என்ன? கொரோனாவை எதிர்கொள்ள உலகளாவிய ஒற்றுமை தேவை. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில், இந்தியா மூன்றாம் கட்டத்தில் உள்ளது.

உலகில், அதிக அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடு என்ற வகையில், உலகளாவிய சமூகத்திற்கு ஒரு உறுதிமொழியை வழங்க விரும்புகிறேன்.இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு, அனைத்து மனிதர்களுக்கும் உதவ, இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோக திறன் பயன்படுத்தப்படும்.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், தற்காலிக உறுப்பினராக, இந்தியா தன் கடமையை எப்போதும் சிறப்பாக செய்துவருகிறது. மனித குலத்திற்கு எதிரான செயல்களை கண்டிக்க, நாங்கள் ஒரு போதும் தயங்கியதில்லை. சுயநலம் கருதாமல், மனிதவள மேம்பாட்டிற்காக, இந்தியா பாடுபடுகிறது. உலக அளவில் அமைதியை நிலைநாட்ட, அதிக உயிர் தியாகம் செய்தது இந்தியா தான்.

உலகளவிய கொள்கைக்கு, இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது.கடந்த, 75 ஆண்டுகளில், உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஐ.நா., சபை துவங்கிய போது இருந்ததை விட, உலகம் தற்போது மாறுபட்ட காலத்திற்கு வந்துள்ளது.காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப, ஐ.நா., சபை, தன் செயல்பாடுகளை மாற்ற வேண்டியுள்ளது. மாறும் காலங்களில் நாமும் மாறாவிட்டால், மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சிகளும் வெற்றி பெறாமல் போய்விடும். ஐ.நா., சபையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, இந்தியா நீண்டகாலமாக காத்திருக்கிறது. இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்என தெரியவில்லை.ஐ.நா., வில் முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் இருந்து, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு, உலகின் மிகப் பெரிய நாடான இந்தியா ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும்? இவ்வாறு, பிரதமர் பேசினார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே, ‘இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தியாவை ஒதுக்கி வைப்பீர்கள்’ என, பிரதமர் பேசியதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here