கினபாலு மலையில் 8 நாட்கள் போராட்டம்: “எனக்காக 40 பேர் உயிரைப் பணயம் வைத்தனர்” — குரோஷிய மலையேற்ற வீரர் உருக்கம்!”

கோலாலம்பூர்:

சபா, கினபாலு மலையில் தனியாகச் சென்று மாயமாகி, காயங்களுடன் 8 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட 46 வயதுடைய குரோஷிய நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரர் மௌரோ பெர்சிக், தனது உயிரைக் காப்பாற்றப் போராடிய மீட்புக் குழுவினருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பல்வேறு முகமைகள் இணைந்து நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் அவர் மீட்கப்பட்டார்.

இச்சம்பவத்தில் அவரது வலது கால் மற்றும் வலது விலா எலும்புகளில் பலத்த காயங்களும், கைகளில் லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளன.

மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு முகநூலில் (Facebook) உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ள மௌரோ பெர்சிக், தனக்காகப் பலரும் ஆபத்தான முறையில் செயல்பட்டதை நினைத்து வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்:”என் இதயம் நொறுங்கிவிட்டது. நான் செய்த தவறுக்காக 40 பேர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து என்னை மீட்டுள்ளனர். என்னைக் கீழே சுமந்து வந்தவர்களில் சுமார் 15 வயதுடைய ஒரு சுமை தூக்கும் சிறுவனும் இருந்தான். அவன் என்னைச் சுமந்து இறங்கும்போது, அவனது முழங்கால் பட்ட வேதனையை என்னால் உணர முடிந்தது” என்று அவர் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

என்னை அறியாத மனிதர்கள் பலர் தனக்கு உணவும், சாக்லேட்டும் வழங்கி, நெருப்பு மூட்டித் தனக்கு ஆறுதல் அளித்த மனிதநேயத்தை வாழ்நாளில் மறக்க முடியாது என அவர் பதிவிட்டுள்ளார்

கோத்தா பெலுட் பகுதியிலிருந்து கினபாலு மலையின் கிழக்குக் கணவாய் வழியாக அனுமதி பெறாமல் அவர் ஆபத்தான முறையில் தனியாக மலையேறியுள்ளார். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சபா துணை மாநிலச் செயலாளர் டத்தோ ஜாமிலி நைஸ், கினபாலு மலையின் பாதுகாப்பு விதிகளை மீறித் தனியாகச் செல்பவர்களுக்குப் பாடமாக அமையும் வகையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சபா சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சுழல் அமைச்சர் டத்தோ ஜாஃப்ரி அரிஃபின் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.இதனிடையே, மௌரோ பெர்சிக் இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதே வேளையில், காவல் துறையினரின் தீவிரக் கண்காணிப்பிலும் தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here