எஸ்பிபி-ன் மருத்துவ செலவை செய்தது யார்? – எஸ்.பி. சரண் காணொளி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒன்றரை மாதத்துக்கு மேலாக அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 24-ம் தேதி அவர்உயிரிழந்தார். இந்தநிலையில், அவருடைய சிகிச்சைக் கட்டணம் தொடர்பாக பரவும் வதந்தி குறித்து எஸ்.பி.பி.சரண் வீடியோ மூலம் விளக்கம் தெரிவித்துள்ளார்.

பரவவும் வதந்தி

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மருத்துவ செலவுகளை குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு கட்டியது போல சிலர் சமூக ஊடகங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

இது தொடர்பாக விளக்க காணொளி ஒன்றை எஸ்.பி. சரண் வெளியிட்டுள்ளார்.

அதில் எங்களை காயப்படுத்தாதீர்கள் என கோரி உள்ளார்.

மேலும் அவர்,எஸ்பிபிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், செலவுகள் குறித்து எம்ஜிஆர் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

எஸ்.பி. சரண் கூறுவது என்ன?

“மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து வதந்தி ஒன்று உலவுகிறது. நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் இன்னும் பணம் பாக்கி இருந்ததாகவும், பின்னர் தமிழக அரசிடம் அதற்காகக் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் துணைத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும் அவர்கள் உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நாங்கள் பாக்கி பணத்தை தரும் வரை அப்பாவின் உடலை எம்ஜிஎம் மருத்துவமனை ஒப்படைக்கவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இவை அனைத்தும் சுத்த அபத்தங்கள்,” என அதில் குறிப்பிட்டு உள்ளார்.

“சம்பந்தப்பட்டவர்களை இது எப்படிப் பாதிக்கும் என்பது கூட புரியாமல், பேசித் தெரிந்து கொள்ளாமல் ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. இதுபோன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது வருத்தத்தைத் தருகிறது. இவர்கள் எஸ்பிபியின் ரசிகர்களாக இருக்க முடியாது,” என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

“நானும், மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து சிகிச்சைக் குறித்தும், சிகிச்சைக் கட்டணம் குறித்தும் விரைவில் அறிக்கை வெளியிடுவோம். எம்.ஜி.எம் மருத்துவமனை எனது அப்பாவுக்கு மிகச் சிறந்த சிகிச்சைகளை அளித்தார்கள். நான் ஒவ்வொரு நாளும் மருத்துவமனை செல்வது வீட்டுக்குச் செல்வது போலவே உணர்ந்தேன். மருத்துவமனைக் கட்டணம் குறித்து விரைவில் அறிக்கை வெளியாகும்,” என்று அந்த காணொளியில் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here