துணியாலான முக கவசத்தை துவைத்து அணிய…

‘துணியால் ஆன முக கவசத்தை துவைத்து அணிய வேண்டியது, மிகவும் அவசியம்’ என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்’ என, உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், முக கவசம் குறித்த ஆய்வு ஒன்றை, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர். ‘சயின்டிபிக் ரிபோர்ட்ஸ்’ என்ற இதழில் வெளியான அந்த ஆராய்ச்சி கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: மனிதர்களின் வாய் மற்றும் மூக்கில் இருந்து வெளியேறும் உமிழ்வு துளிகள் வாயிலாகவே வைரஸ் பரவுகிறது. மிகச் சிறிதான இந்த துளிகள், குறிப்பிட்ட துாரம் வரை காற்றில் மிதக்கக் கூடியவை. எனினும், இவை கொரோனா போன்ற வைரஸ்களை எளிதில் சுமக்கக் கூடியவை. குறிப்பிட்ட சிலர், அதிக அளவிலான உமிழ்வு துளிகளை வெளியேற்றுவர். இவர்கள், ‘சூப்பர் எமிட்டர்கள்’ என்று அழைக்கப்படுவர்.இது குறித்த ஆய்வு, 10 தன்னார்வலர்களை வைத்து மேற்கொள்ளப்பட்டது.

இவர்களில், முக கவசம் அணியாமல் சிலரும், ‘சர்ஜிக்கல்’ முக கவசம், ‘என் – 95’ முக கவசம், துணியால் ஆன முக கவசம் போன்றவற்றை அணிந்தபடியும் சிலர் இருந்தனர். இதில் இருந்த ஒரு, சூப்பர் எமிட்டர், சராசரி மனிதர் வெளியேற்றும் உமிழ்வு துளிகளை விட, 100 சதவீதம் அதிகமான துளிகளை, இருமும்போது வெளியேற்றினார். இந்த ஆய்வு மூலம், சர்ஜிக்கல் மற்றும் என் – 95 முக கவசங்கள், 90 சதவீத உமிழ்வு துளிகளை தடுத்து நிறுத்தும் என, தெரிய வந்துள்ளது. முக கவசம் அணிவதால், சூப்பர் எமிட்டர்களிடம் இருந்து வெளியேறும் உமிழ்வுகளின் அளவு குறையும்.

துணியால் ஆன முக கவசத்தை அணியும்போது, அதிலுள்ள சிறிய நுால்கள், காற்றில் அதிக அளவு வெளியேறும். எனவே, வெளியேறும் உமிழ்வு துளிகளை கட்டுப்படுத்தும் எனக் கூறுவது கடினமாகும். எனினும், பெரிய அளவிலான உமிழ்வுகளை, இந்த வகை முக கவசம் தடுக்கும். இந்த முக கவசங்களை, துவைத்து அணிய வேண்டியது முக்கியமாகும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here