கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூத்தக்குடி. இங்குள்ள காப்புக்காட்டில் 2011ஆம் ஆண்டு சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்தக் கொலை சம்பந்தமாக எடைக்கல் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மகன் கண்ணன் என்பவர்தான் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார் கண்ணன். இந்த நிலையில் நேற்று உளுந்தூர்பேட்டை அருகே பதுங்கியிருந்த கண்ணனை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் தலைமையிலான போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்த கண்ணனை உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கொலை வழக்கில் நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்த குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.