தங்கம் வென்ற ‘பாக்ஸர்’ வழிப்பறி வழக்கில் கைது

தேசிய பாக்சிங் போட்டியில், தங்கம் வென்ற வாலிபர் உட்பட மூவரை, வழிப்பறி வழக்கில், திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு, நிலக்கோட்டை, வத்தலகுண்டில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம், அடிக்கடி வழிப்பறிகள் நடந்தன.

இது தொடர்பாக, அரசராஜன், 19; கதிரேசபிரபு, 20; தேசிய, ‘பாக்சிங்’கில் தங்கம் வென்ற, பாலமுருகன், 22, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பி.எஸ்சி., பட்டதாரியான பாலமுருகன், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பெற்றோருடன் வசித்து வந்தார். இரு ஆண்டுகளுக்கு முன், தேசிய பாக்சிங் போட்டியில் தங்கம் வென்றவர், கொரோனா அதிகமானதால், சொந்த ஊரான குல்லிசெட்டிபட்டிக்கு வந்து தங்கினார். கஞ்சா பழக்கத்தில் அறிமுகமான கதிரேசபிரபு, அரசராஜனுடன் சேர்ந்து, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். போலீசார் கூறுகையில், ‘திண்டுக்கல்லில், பாலமுருகன் திருடிய இருசக்கர வாகனத்தை, இரண்டு நாட்களில், நாக்பூருக்கு ஓட்டிச் சென்று மறைத்து வைத்தார்.

விமானத்தில் திரும்பி வந்து, வழிப்பறியை தொடர்ந்தார்.’இவர்களிடம், மூன்று அலைபேசிகள், 2 சவரன் நகை, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இக்கும்பலை சேர்ந்த மேலும் இருவரை தேடி வருகிறோம்’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here