1000 கிலோ வெடிகுண்டுகளை தாங்கி செல்லும் சவ்ரியா ஏவுகணை சோதனை வெற்றி

எல்லையில் சீனாவுடன் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில்,  ஆயிரம் கிமீ தூரம் பாய்ந்து தாக்கும் திறன் படைத்த புதிய அணு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. லடாக் எல்லையில் இந்திய – சீன ராணுவங்களுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளும் எல்லையில் முப்படைகளையும் குவித்துள்ளன. இந்நிலையில், இந்தியா தொடர்ந்து சில நாட்களாக புதுப்புது ஏவுகணைகளின் பரிசோதனைகளை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன், மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நேற்று அது, ‘சவ்ரியா’ என்ற அணு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில்,  சவ்ரியா ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நடத்திய இந்த சோதனையில், வங்காள விரிகுடாவில் வைக்கப்பட்ட இலக்கை சவ்ரியா துல்லியமாக தாக்கி அழித்தது. இது குறித்து டிஆர்டிஓ விஞ்ஞானிகள் கூறுகையில், ‘‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையும், தொழில்நுட்பத்தையும் கொண்டே சவ்ரியா தயாரிக்கப்பட்டுள்ளது. இது, 1,000 கிமீ வரையிலான இலக்கைச் சென்று துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது. 200 கிலோ முதல் 1000 கிலோ வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்லும்,’’ என்றனர்.

‘சாட்டிலைட்டில் சிக்காது’
உலகின் மிகச்சிறந்த 10 ஏவுகணைகளில் ஒன்று என்ற பெருமையை சவ்ரியா பெற்றுள்ளது. எதிரி நாட்டினரால் இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பது தனிச்சிறப்பு. மேலும், செயற்கைக்கோள்களின் பார்வையிலும் சிக்காது. ஒலியை விட பலமடங்கு வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here