சசிகலாவின் ரூ2000 கோடி சொத்துக்கள் முடக்கம்

சசிகலாவின் சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பினாமி சட்டத்தின்கீழ் வருமானவரித்துறை முடக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரின் தோழி சசிகலாவுக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களுக்கு உரிய முறையில் வருமான வரி கணக்கு காட்டவில்லை என்று வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகவே திரைத்துறை மூலம் ஈட்டிய பணத்தை கொண்டு ஜெயலலிதா பல சொத்துக்களை வாங்கியிருந்தார். போயஸ் கார்டன் வீட்டையும் வாங்கினார்.

ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியாகவும், தோழியாகவும் சுமார் 30 ஆண்டுகாலம் அவருடன் இருந்தவர் சசிகலா. எந்த சொத்துக்களும் இல்லாத நிலையில் சசிகலா மற்றம் அவரது குடும்பத்தினர் தங்கள் இஷ்டத்திற்கு சொத்துக்களை வாங்கி குவித்ததாக புகார் வந்தது. இதையடுத்து, கடந்த 1996ல் போயஸ் கார்டன் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை நடத்தியது. இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு பல்வேறு நீதிமன்ற விசாரணைகளைக் கடந்து இறுதியில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 2014 செப்டம்பரில் தீர்ப்பளித்தது. தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் நடந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து 2017ல் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, 2017 முதல் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டில் சசிகலா மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மெகா ரெய்டு நடத்தினர். கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் ஒன்பது இடங்களை சுமார் ரூ.1,600 கோடி ரூபாய் அளவுக்கு வாங்கியிருக்கிறார்கள்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து சசிகலாவுக்கு சொந்தமான ரூ.1500 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி வைத்துள்ளது. அதை தொடர்ந்து கடந்த 2003 முதல் 2005 வரை பினாமி பெயர்களில் சசிகலா வாங்கிய ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சொத்து முடக்கம் தொடர்பாக சென்னை போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் புதிய வீடு உள்ளிட்ட இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சென்னையின் அதிமுக்கிய வி.வி.ஐ.பி.க்கள் மட்டுமே வசிக்கக் கூடிய பகுதி தான் போயஸ் கார்டன். இங்கு தான் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லம் அமைந்துள்ளது.

இதுவரை சசிகலா மற்றும் அவரது பினாமி பெயர்கள் வாங்கப்பட்ட ரூ1800 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையை அடுத்துள்ள சிறுதாவூரில் உள்ள 116 ஏக்கர் பரப்பில் உள்ள நிலங்களுடன் கூடிய பங்களா, நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள தேயிலை தோட்டங்கள் அடங்கிய சுமார் 1000 ஏக்கர் எஸ்டேட் ஆகியவற்றை முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் பெயர்களில் வாங்கப்பட்டுள்ள இந்த சொத்துக்களையும் சேர்த்து சுமார் ₹2000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நேற்று வருமான வரித்துறை பினாமி தடுப்பு சட்டத்தின்கீழ் முடக்கம் செய்துள்ளது.

இந்த சொத்துக்களின் தற்போதைய சந்தை விலை சுமார் ரூ4000 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. சசிகலாவின் தண்டனைக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடியும் நிலையில் அவரை விரைவில் வெளியே கொண்டுவர பல்வேறு விதமான நடவடிக்கைகளை அவரது ஆதரவாளர்கள் எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், அவரது சொத்துக்களை வருமான வரித்துறை தொடர்ந்து முடக்கி வருவது அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுகவினர் பேசி வருகிறார்கள். இந்நிலையில் சிறுதாவூர் பங்களா முடக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து வருமான வரித்துறை துணை கமிஷனர் யு.என்.திலீப் கையொப்பமிட்டுள்ள நோட்டீஸ் சிறுதாவூர் பங்களாவின் சுவரில் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், “ பினாமி சொத்து தடுப்பு மற்றும் பரிவர்த்தனை சட்டம் பிரிவு 24 (1)ன்கீழ் இந்த நடவடிக்கை நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. மேற்கண்ட பினாமி சொத்துகள் தொடர்பான வழக்கின் உண்மைத்தன்மையை பரிசீலித்து இந்த சொத்துக்களின் பினாமி, பயனாளி, உரிமையாளரிடம் நடவடிக்கை குறித்து கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், எந்த கருத்துக்களும் வராததால் பினாமி சொத்து தடுப்பு மற்றும் பினாமி பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் மேற்கண்ட சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்கண்ட சொத்தின் மூலம் எந்த பலனையும் பெறவோ, சொத்துக்களை வேறு நபர்களுக்கு மாற்றம் செய்யவோ தடை விதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவு உரிய ஒப்புதல் அதிகாரியின் ஒப்புதலை பெற்ற பிறகு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், கொடநாடு எஸ்டேட்டிலும் கொடநாடு எஸ்டேட் சொத்து முடக்கம் தொடர்பாக வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது.சிறுதாவூர் பங்களா முடக்கம் நடவடிக்கை தொடர்பான நோட்டீஸ் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, வி.என்.சுதாகரன் ஆகியோருக்கும் நோட்டீசின் நகல் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக், ஜெ.தீபா, திருப்போரூர் சார்பதிவாளர் ஆகியோருக்கும் வருமான வரித்துறையால் அனுப்பப்பட்டுள்ளது.

* 2016 பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் சசிகலா மற்றும் உறவினர்கள் ஒன்பது இடங்களில் சுமார் 1600 கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கி குவித்தனர்.
* நீதிமன்ற உத்தரவுப்படி, சசிகலாவுக்கு சொந்தமான ரூ1500 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரி துறை முடக்கியது.
* கடந்த 2003 முதல் 2005 வரை பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ300 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here