பாம்பன் ரயில் பாலத்தில் நேற்று 22 பெட்டிகளுடன் ரயில் சோதனை ஒட்டம் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 2ம் தேதி முதல் ராமேஸ்வரம் – சென்னை இடையே சேது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. அக். 3ம் தேதி பாம்பன் பாலத்தில் ரயில் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளை அளவிடும் சென்சார் கருவியில் வழக்கத்திற்கு மாறான அளவீடு காட்டியதால், ரயில் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.
சென்னை கோட்டத்தில் இருந்து வந்த பொறியாளர் குழுவினர் கடந்த 5 நாட்களாக பாம்பன் ரயில் பாலத்தில் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர். நேற்று பெங்களூர் ஐஐடி மற்றும் தெற்கு ரயில்வே நிர்வாகத்தை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கிருத்திக்குமார் தலைமையில், புவனேஸ்வரன், ஜஸ்டின், சந்திரசேகர், கணேசன், பாலசுப்ரமணியன் ஆகியோர் பாம்பன் பாலத்தில் ஆய்வு செய்தனர்.
இதையொட்டி ராமேஸ்வரத்திலிருந்து ஆட்கள் இல்லாத 22 பெட்டிகளுடன் புறப்பட்ட ரயில் பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியில் முன்னும் பின்னும் பலமுறை இயக்கப்பட்டு பாலத்தில் ஏற்படும் அதிர்வுகள் குறித்து சென்சார் கருவியில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சென்சார் கருவி காட்டும் அளவீடுகளின் அடிப்படையில் பிரச்னை எதுவும் இல்லாத பட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுப்பணி முடிந்து பாலத்தில் மீண்டும் பயணிகளுடன் ரயில் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று பால பராமரிப்பு பொறியாளர்கள் தெரிவித்தனர்.