புதிய சாதனை படைத்தார் நார்ட்ஜே

டெல்லி வீரர் நார்ட்ஜே, மணிக்கு 156.2 கிமீ வேகத்தில் பந்து வீசி  8 ஆண்டு கால ஐபிஎல் சாதனையை முறியடித்து, புதிய ஐபிஎல் சாதனையை நிகழ்த்தியுள்ளார். மும்பையிடம் தோற்ற பிறகு புள்ளிப்பட்டியலில்  டெல்லி கேப்டல்ஸ் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான லீக் ேபாட்டியில் வென்றதின் மூலம் மீணடும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு  அந்த அணியின் பந்துவீச்சாளர்களே காரணம்.  ராஜஸ்தானின் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் விளையாடிய வேகத்தை பார்த்த போது அந்த அணிதான் வெற்றிப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டெல்லியின் வேகப்பந்து வீச்சாளர்களான காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் கடைசி  ஓவர்களை பொறுப்புடன் வீசியதால் வெற்றி டெல்லியின் வசமானது.  கூடவே டெல்லியின்  சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின், அக்சர் படேல் ஆகியோரும் கட்டுக்கோப்பாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு கை கொடுத்தனர். அதிலும் நார்ட்ஜே  அதிகபட்சமாக மணிக்கு 156.2கிமீ வேகத்தில் பந்து வீசி புதிய சாதனை படைத்துள்ளார். அதன் மூலம்  8 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் வீரரான டேல் ஸ்டெயின் நிகழ்த்திய சாதனையை நார்ட்ஜே  முடியடித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக பந்து வீசிய முதல் 5 வீரர்களின் பட்டியலில் 3இடங்களில் நார்ட்ஜிதான் இருக்கிறார். இப்போது 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள ஸ்டெயின் 154.4கிமீ வேகத்திலும், 5வது இடத்தில் உள்ள காகிசோ ரபாடா 153.9கிமீ வேகத்தில் வீசி உள்ளனர். இவர்கள் மூவரும் தென் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள் மேலும் நடப்புத் தொடரில் அதிவேகமாக பந்து வீசிய 10 வீரர்களுக்கான பட்டியலில்  முதல் 5 இடங்கள் நார்ட்ஜிதான் இருக்கிறார். மேலும், 10வது இடமும் அவருக்குதான். மீதி 6 முதல்  9வரையிலான 4  இடங்களை ராஜஸ்தான் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர்  பிடித்துள்ளார். அவர் அதிகபட்சமாக மணிக்கு 153.2கிமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார்.

அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி   20ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161ரன் எடுத்தது.  கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 53,  ஷிகர் தவான் 57ரன் எடுத்தனர். ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர் 4ஓவர் வீசி 19 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 3விக்கெட்களை அள்ளினார். உனத்கட் 2, தியாகி, கோபால் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து விளையாடிய ராஜஸ்தான்  20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது.  அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 41ரன் எடுத்தார். டெல்லி அணியின் அஷ்வின் 4 ஓவர் வீசி 17ரன் மட்டுமே தந்து ஒரு விக்கெட் எடுத்தார். நார்ட்ஜே, தேஷ்பாண்டே தலா 2, பட்டேல், ரபாடா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

அதிவேகமாக பந்து வீசி புதிய சாதனை படைத்த  நார்ட்ஜே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டிக்கு பிறகு  நார்ட்ஜே, ‘ கடந்த சில நாட்களாக யோசித்துக் வைத்திருந்தேன். அதன் முடிவுகளை இன்று பார்த்ததில் மகிழ்ச்சி. பட்லர் உண்மையில் அற்புதமாக விளையாடினார். அவர் எனது முதல் பந்தை சிக்சருக்கு விரட்டுவார் என்று எதிர்பார்க்கவில்லை.  அந்த ஓவரிலேயே அவர் விக்கெட் கிடைத்தது. அதன் பிறகு கிடைத்த நல்வாய்ப்புகளை பயன்படுத்தினேன்.   எங்களுக்கு நல்ல பயிற்சியாளர் கிடைத்திருக்கிறார்.  ரபாடாவுடன் பணியாற்றுவதை விரும்புகிறேன்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here