இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி தொடங்கி கவிஞர்கள் தாமரை, வைரமுத்து தொட்டு தமிழ் தேசிய தலைவர்கள் சீமான், திருமுருகன் காந்தி வரை அனைவரும் விஜய் சேதுபதிக்கு படத்தில் இருந்து விலகுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன், நடிகை ராதிகா, நடிகர் சரத்குமார் ஆகியோர் நடிப்பதில் என்ன தவறு என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக முத்தையா முரளிதரனும், தயாரிப்பு நிறுவனமும் விளக்கமும் அளித்துள்ளனர். இந்த நிலையில் விஜய் சேதுபதி என்ன முடிவெடுக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அவரோ என்ன செய்வது என தெரியாமல் மௌனம் காக்கிறார். பன்மொழித் திரைப்படம், இலங்கையில் நல்ல விற்பனை வாய்ப்பு என்பதால் விஜய் சேதுபதிக்கு கூடுதல் சம்பளம் தர மும்பையை சேர்ந்த தார் நிறுவனம் முன்வந்துள்ளது. அதில் பாதி தொகையை முன்பணமாகவும் அவருக்கு கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுவே விஜய் சேதுபதியின் தயக்கத்துக்கு காரணம் என்கின்றனர் சினித்துறையினர்.
தற்போது இருக்கும் சூழலில் தயாரிப்பாளர்களிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்த பணத்தை திருப்பிக் கொடுத்து விஜய் சேதுபதி பின்வாங்கலாம். ஆனால் தமிழில் முதல் முறையாக களம் இறங்கும் தயாரிப்பு நிறுவனம் அவப்பெயர் ஏற்படும் என்பதால் இதற்கு சம்மதிக்குமா என்பது சந்தேகமே.விஜய் சேதுபதி தயாரிப்பு நிறுவனத்தை எதிர்த்து பணத்தை திருப்பியளித்து ஒப்பந்தத்தை முறிக்கலாம். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வரும் சட்டப்போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். மும்பையை சேர்ந்த தார் தயாரிப்பு நிறுவனத்துக்கு வேறு படம் நடித்துக் கொடுப்பதாக பேசி குறைந்த சம்பளத்தில் புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
அப்படி செய்யும் பட்சத்தில் தயாரிப்பு நிறுவனம் இணங்கி வர வாய்ப்பிருக்கிறது. இறுதி வாய்ப்பாக எதிர்ப்புகளை மீறி படத்தில் நடித்து வெளியிடலாம் விஜய் சேதுபதி. இதில் அவர் எந்த முடிவை எடுக்க போகிறார் என சினித்துறை முதல் அரசியல் வட்டாரங்கள் வரை காத்திருக்கிறார்கள்.