மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 70-ஆக அதிகரிப்பு

தெலங்கானாவில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் கனமழைக்கு 70 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்த மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் திங்கள்கிழமை தெரிவித்தார். மழை வெள்ளம் நீடிப்பதால் நகரிலுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களுக்கு செல்லவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த 2 நாள்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் கே.டி.ராமராவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
1908-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது பதிவான மழையின் அளவு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 37,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (ஜிஎச்எம்சி) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 33 பேர், பிற மாவட்டங்களில் 37 பேர் என மொத்தம் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து மழை நீடிப்பதாலும், மேலும் 2 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் தாழ்வானப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அல்லது அரசின் நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும். அடுத்து வரும் 2 நாள்களில் ஆயிரக்கணக்கான மக்களை நிவாரண முகாம்களில் தங்கச் செய்துவிடுவோம்.

இதன் மூலம் உயிரிழப்பைக் குறைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். ஹைதராபாத் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் உயிரிழந்த 33 பேரில் 29 பேரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாநகரில் எந்தந்தப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் அந்தந்த காலனி பகுதிகள் வசிப்பவர்களை வீடு வீடாகச் சென்று அவர்களை வெளியேற்றி, நிவாரண முகாம்களில் தங்க வைப்போம். ஓரிரு தினங்களுக்குள் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றிவிடுவோம்.

அடுத்த 2 அல்லது 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளதால், மாநில அரசு, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை (என்டிஆர்எஃப்) உடன் ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார் ராமராவ்.

கடந்த சனிக்கிழமை இரவு பெய்த கனமழையால் ஞாயிற்றுக்கிழமை நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு நூற்றாண்டு கால அளவில் கண்டிராத அளவு மழை கடந்த வாரத்தில் பெய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here