புவனேஸ்வர்: ஒடிசாவில் வெப்ப அலை காரணமாக கடந்த 72 மணி நேரத்தில் 99 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வழக்கமாக ஏப்ரல் மே மாதங்களில் வெயில் பட்டையை கிளப்பும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமே வெயில் தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டது. தென் மாநிலங்களில் மே மாதம் தொடக்கத்தில் இதமான வானிலை நிலவியது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்தது.ஆனால் வட மாநிலங்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருந்தது. ராஜஸ்தான் தொடங்கி மேற்கு வங்கம் வரை வெயில் தீவிரமாக இருந்தது. பல இடங்களில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியிருந்தது.
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், கிழக்கு மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகள், ஒடிசா, ஜார்க்கண்டின் சில பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, நேற்று முன்தினம் கான்பூரில் அதிகபட்சமாக 48.2 டிகிரி செல்சியசும், ஹரியானாவின் சிர்சா 47.8 டிகிரியும், டெல்லியின் அயநகரில் 47 டிகிரியும் வெயில் பதிவாகியிருந்தது.இந்நிலையில் வெப்ப அலை காரணமாக கடந்த 72 மணி நேரத்தில் ஒடிசாவில் மட்டும் 99 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.இந்த 99 உயிரிழப்புகளில் 20 பேரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வெப்ப தாக்கம் காரணமாகதான் உயிரிழந்தனர் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மீதிமிருக்கும் வழக்குகளையும் சிறப்பு நிவாரண ஆணையர் விசாரித்து வருகிறார். பொதுவாக கோடைக்காலங்களில் வெயிலை விட காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவுதான் உயிரிழப்பை ஏற்படுத்துவதற்கு மிக முக்கிய காரணியாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.காற்றில் அதிக அளவு ஈரப்பதம் இருக்கும் நிகழ்வை ‘ஈரக்குமிழ் வெப்பநிலை’ (வெட் பல்ப்) என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாக இருக்கும் போது நீங்கள் நல்ல நிழல் பகுதியில் இருந்தாலும், பருத்தியால் ஆன ஆடையை அணிந்திருந்தாலும் கூட இது உங்களை கொல்லும் அளவுக்கு ஆபத்தானது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். அதாவது வெயில் அதிகமாக இருக்கும்போது உடலிலிருந்து நீர், வியர்வை மூலம் வெளியேறும். இந்த வியர்வை ஆவியாகும்போது உடலின் வெப்பமும் ஆவியாகிவிடுகிறது. இதனால் உடல் குளிர்ச்சியடையும். வியர்வையின் பணி இதுதான். இதற்கு காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்க வேண்டும்.
ஆனால், காற்றின் ஈரப்பதம் அதிகமானால், இந்த செயல்முறையானது தாமதமாகும், வியர்வையும் சுரக்காது. இதனால் உடலின் வெப்பநிலை குறையாது. வெயில் அதிகமாக இருந்து நமக்கு வியர்வை வரவில்லை எனில் அது ஆபத்தை ஏற்படுத்தும். 35 டிகிரிக்கு மேல் காற்றில் ஈரப்பதம் இருந்தால் உடலில் உள்ள வெப்பம் வெளியேறாது. எனவே உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சென்னையில் நேற்று 32 டிகிரிக்கு வெட் பல்ப் வெப்பநிலை பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





















