வர்த்தகம், முதலீடு செய்வது குறித்து இலங்கை அதிபருடன் அமெரிக்கா பேச்சு

இந்தியாவைத் தொடர்ந்து இலங்கை சென்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அந்நாட்டு அதிபர் கோத்தபய  ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வெளிப்படையான வர்த்தகம், முதலீடு செய்வது குறித்து பேசப்பட்டிருப்பதால் சீனா படுகோபம்  அடைந்துள்ளது. இந்தியாவில் வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்களுடன் 2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்  பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் கடந்த திங்கட்கிழமை இந்தியா வந்தனர். நேற்று முன்தினம் நடந்த 2+2 பேச்சுவார்த்தையில் அமெரிக்க  ராணுவ செயற்கைகோள் புகைப்படங்களையும், வரைபட தரவுகளையும் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும், சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பரஸ்பர பிரச்னை குறித்தும் இருநாட்டு அமைச்சர்கள் விவாதித்தனர்.
இந்த சந்திப்புக்கு பின் பேட்டி அளித்த பாம்பியோ, ‘இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும்,’ என சீனாவுக்கு  எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து 2 நாள் பயணமாக அவர் நேற்று இலங்கை சென்றார். தலைநகர் கொழும்புவில் அவர் இலங்கை அதிபர்  கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகள், பரஸ்பர பொருளாதார ஒத்துழைப்பு, வெளிப்படையான வர்த்தகம்  செய்வது, முதலீடு மேற்கொள்வது மற்றும் கொரோனா மீட்பு நடவடிக்கைகள் முதல் ஜனநாயக சுதந்திரத்தை உறுதி செய்வது வரை பல்வேறு  விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து பாம்பியோ, இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனேவையும் சந்தித்து பேசினார். இலங்கையில் மிக அதிகளவில்  முதலீடு  செய்யும் நாடாக சீனா உள்ளது. ஆனால், இலங்கையில் பொருளாதார பாதிப்புகளை சீனா  தனக்கு சாதகமாக பயன்படுத்தி அந்நாட்டை  கடனில் மூழ்கடிப்பதுடன், இலங்கையின்  மூலமாக இந்தியப் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவும்  முயற்சிக்கிறது. இதற்கு  முட்டுக்கட்டை போடும் விதமாக தற்போது அமெரிக்கா  முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது சீனாவை பயங்கர ஆத்திரமடைய  செய்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பயணத்தின் மூலம் சீனா-இலங்கை இடையே கருத்து வேறுபாட்டை மூட்டி விட அமெரிக்க முயற்சிப்பதாக குற்றம்  சாட்டியுள்ள சீனா, பிற நாட்டின் உள்விவகாரம் மற்றும் வெளியுறவு விஷயத்தில் அத்துமீறி மூக்கை நுழைப்பது அசிங்கமான செயல் என்றும்  கண்டனம் தெரிவித்துள்ளது.

நாங்க வேற லெவல்
இலங்கை வெளியுறவு அமைச்சருடன் கூட்டாக பேட்டி அளித்த மைக் பாம்பியோ, ‘‘சீன கம்யூனிஸ்ட் கட்சி வேட்டையாடும் குணம் கொண்டது.  அவர்களிடம் இருந்து நாங்கள் வேறுபட்டவர்கள். இங்கு நாங்கள் நட்புடன் வந்துள்ளோம். இலங்கையுடன் உறவை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா  விரும்புகிறது,’’ என சீனாவின் கோபத்தை மேலும் தூண்டி விட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here