சாதனை படைத்த தைவான்: 6 மாதங்களாக கொரோனா தொற்று இல்லை

உலகின் பல பகுதிகளிலும் தினமும் கொரோனா தொற்று புதிதாக பதிவாகி வரும் நிலையில், தைவான் நாட்டில் கடந்த 6 மாதங்களாக கொரோனா பரவல் இல்லை.ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவலின் 2-வது அலை தொடங்கியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சீன குடியரசு நாடான தைவானில் கடந்த ஏப்., 12 முதல் உள்ளூரில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. முன்னதாக 553 பேருக்கு தொற்று இருந்தது. 7 பேர் இறந்திருந்தனர். அதன் பிறகு கடந்த 200 நாட்களில் யாருக்கு தொற்று ஏற்படவில்லை. இருப்பினும் கட்டுப்பாடுகளை தைவான் கடைபிடித்து வருகிறது. ஜனவரியிலேயே எல்லைகள் மூடல்!சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை உயர தொடங்கிய ஜனவரி மாதமே தைவான் தனது எல்லைகளை இழுத்து மூடியது. பயணங்களை ஒழுங்குபடுத்தி வந்தது. இன்னமும் எல்லைகள் மீதான கட்டுப்பாடுகளை அப்படியே வைத்துள்ளது. முன்கூட்டியே எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கை இது என்கிறார்கள். அது தவிர நிபுணர்கள் பரிந்துரைத்த அனைத்து விதிகளையும் கண்டிப்புடன் அமல்படுத்தியது.

தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை தீவிரமாக கண்டுபிடித்தது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவருடன் சம்பந்தப்பட்ட 150 பேர் வரை தனிமைப்படுத்தியது. அனைவருக்கும் அரசால் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டன. இவை கொரோனாவை தடுத்த முக்கிய காரணிகளாகும்.பொருளாதாரத்திலும் வளர்ச்சி!2.3 கோடி மக்கள் தொகையுடன் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கமாக இருக்கும் தைவான், குறைவான கொரோனா தொற்று பாதிப்பால் பொருளாதார ரீதியாகவும் பலனடைந்துள்ளது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.56% வளர்ந்துள்ளது. இந்த ஆண்டு பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்ட சொற்பமான நாடுகளில் தைவானும் ஒன்று. உள்ளூர் அளவில் தைவானில் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், கடந்த 2 வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இதனால் எச்சரிக்கையை தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here