ஜார்ஜ் டவுன்: பினாங்கு, கெடா மற்றும் பேராக் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட ஒன்பது சோதனைகளில் 12 சந்தேக நபர்களைக் கைதுசெய்ததோடு, 822,000 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்ததன் மூலம் ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் முடக்கியுள்ளனர்.
சந்தேக நபர்கள் 22 முதல் 46 வயதுக்குட்பட்டவர்கள், அக்டோபர் 27 மற்றும் 28 தேதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைது செய்யப்பட்டனர் என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை துணை இயக்குநர் துணை ஆணையர் ஜைனுடின் அகமது தெரிவித்தார்.
பேராக், கெடா குபாங் மற்றும் பினாங்கு மத்திய செபராங் பிறை மாவட்டத்திற்குள் உள்ள பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 309 கிலோ கஞ்சா மற்றும் 495 கிராம் மெத்தாம்பேட்டமைன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டி.எம்.பி ஜைனுடின் மேலும் கூறுகையில், போதைப்பொருள் மற்றும் 65,090 வெள்ளி ரொக்கத்தை தவிர, 1.5 மில்லியன் மதிப்புள்ள 15 வாகனங்களையும் போலீஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அண்டை நாடுகளிலிருந்து கடல் வழியாக வழங்கப்படும் போதைப் பொருள் பினாங்கு, பேராக் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் விநியோகிக்கப்படுவதாக நம்பப்படுகிறது என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) இங்குள்ள பினாங்கு பொலிஸ் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கு ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிருபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.