ஷா ஆலம் | பிப்ரவரி 26, 2026 –
ஷா ஆலம், ஆலம் புடிமான் (Alam Budiman) பகுதியில் பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார்.
நேற்று பேராக், பிடோர் (Bidor) பகுதியிலிருந்து ஷா ஆலம் நோக்கி லோரி வந்து கொண்டிருந்தபொது, பெர்சியாரான் மொக்தார் தாரி (Jalan Persiaran Mokhtar Dahari), ஆலம் புடிமான் என்ற இடத்தில், மதியம் 1:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர், அசிஸ்டண்ட் கமிஷனர் ரம்சே எம்போல் (Ramsay Embol) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், லோரியின் பிரேக் செயலிழந்ததே (Brake Failure) விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதனால் ஓட்டுநர் லோரியின் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்தின் தாக்கத்தில் லோரியில் இருந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் சாலை முழுவதும் சிதறிக் கிடந்தன.
லோரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட 20 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஓட்டுநரை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் கடுமையாகப் போராடி மீட்டனர். அதேநேரம் ஓட்டுநருடன் பயணம் செய்த 30 வயது மதிக்கத்தக்க உதவியாளரும் காயமடைந்தார்.
தலையிலும் கால்களிலும் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு (Shah Alam Hospital) கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.













