மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்துவேன்

அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. ஜார்ஜியா, நெவாடா, அரிசோனா, பென்சில்வேனியா என நான்கு முக்கிய மாகாணங்களிலும் ஜோ பிடென் முன்னிலை பெற்றுள்ளதால் அவரது வெற்றி வாய்ப்பு உறுதியாகி விட்டது. பதவி இழக்கும் கடைசி தருணத்தை எட்டியிருக்கும் டிரம்ப், வாக்கு எண்ணிக்கை முறைகேடு தொடர்பாக மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடத்தப் போவதாக  கூறியுள்ளார்.
அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடெனும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருப்பதால், வழக்கத்துக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வெளியாவதில் கடும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களாக வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி, 538 வாக்காளர் குழுவின் வாக்குகளில் பிடென் 253 வாக்குகளையும், டிரம்ப் 213 வாக்குகளையும் பெற்றிருந்தனர். பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்பதால், பிடெனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், டிரம்ப் ஆதரவாளர்கள் பல்வேறு மாகாணங்களில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி,   வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், நேற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்தது.

அதிபரை  தீர்மானிக்கக் கூடிய முக்கிய மாகாணங்களான ஜார்ஜியா, பென்சில்வேனியா, நெவாடா, அரிசோனா மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. இதில், 16 வாக்காளர் குழுவின் வாக்குகளை கொண்ட ஜார்ஜியா மாகாணத்தில் பிடென், டிரம்ப்பை முந்தினார். அங்கு டிரம்ப்பை விட பிடென் 1,096 வாக்குகள் முன்னிலையுடன் உள்ளார். மேலும் நெவாடா, அரிசோனாவிலும் பிடென் முன்னிலை வகிக்கிறார். மேலும், 20 வாக்காளர் குழு வாக்குகளை கொண்ட பென்சில்வேனியாவில் மட்டும் டிரம்ப் முன்னிலையில் இருந்த நிலையில் நேற்றிரவு அதையும் பிடென் தட்டிப் பறித்தார். அங்கும் அவர் 5 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றார்.

90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு விட்ட அரிசோனா மாகாணத்தில் பிடென் வெற்றி பெற்று விட்டதாக சில அமெரிக்க டிவி சேனல்கள் கூறுகின்றன. இதனால், ஏற்கனவே 264 வாக்காளர் குழு வாக்குகளை அவர் பெற்று விட்டதால், ஜார்ஜியா (16), நெவாடாவை (6) கைப்பற்றும் பட்சத்தில் அதிபராவதற்கான பெரும்பான்மையை பெற்று விடுவார். ஜார்ஜியாவை பிடென் கைப்பற்றும் பட்சத்தில் டிரம்ப் வெற்றிக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விடும். பென்சில்வேனியாவிலும் பிடென் முன்னிலையில் இருப்பதால் டிரம்ப்பின் அதிபர் கனவு கிட்டத்தட்ட தகர்ந்து விட்டது.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் தேர்தலுக்கு பின் முதல் முறையாக வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில், , ‘‘சட்டப்பூர்வமாக போடப்பட்ட வாக்குகளை மட்டும் எண்ணியிருந்தால், நான் மிகவும் எளிதாக வென்றிருப்பேன்.

சட்டவிரோதமாக போடப்பட்ட வாக்குகளையும் எண்ணினால், அவர்கள் எங்களிடமிருந்து வெற்றியை அபகரித்துக் கொள்வார்கள். ஜனநாயக கட்சியால்  படுபயங்கரமான ஊழல்களும், முறைகேடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த முறைகேட்டை எதிர்த்து ஏராளமான வழக்குகளை தொடருவோம். மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடத்துவேன்’’ என ஆவேசமாக பேசினார். தேர்தலில் தோற்றாலும், பிடெனை அதிபராக்க விடக்கூடாது என்பதில் டிரம்ப் தீவிரமாக இருப்பது இதன்மூலம் தெரிய வந்துள்ளது.

உட்கட்சி மோதல் ஆரம்பமானது
தேர்தல் தோல்வி நெருங்கியதுமே டிரம்ப்பின் குடியரசு கட்சியில் உட்கட்சி மோதல் ஆரம்பித்து விட்டது. டிரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்ப் தேர்தல் முறைகேடு குறித்து தனது டிவிட்டர் பதிவில், ‘‘முறைகேட்டை எதிர்த்து யார் போராடுகிறார்கள், யார் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதை அனைவருமே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 2024ல் கட்சியின் நம்பிக்கையானவர்களாக பார்க்கப்படும் நிக்கி ஹாலே போன்றவர்கள் எதுவும் செய்யாதது ஆச்சரியமாக இருக்கிறது.

பல ஆண்டுகளாக குடியரசு கட்சியினர் பலவீனமாகவே இருந்து, இதுபோன்ற மோசடிகளை நடக்க அனுமதித்து விட்டார்கள். இதற்கு முடிவு கட்ட வேண்டும்’’ என்றார். இந்திய அமெரிக்கரான நிக்கி ஹாலே  குடியரசு கட்சியின் பிரபலமான தலைவர்களில் ஒருவர். அவர் மீது டிரம்ப் மகன் குற்றம்சாட்டியிருப்பது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாகாணங்கள் நிலவரம்
அதிபரை தீர்மானிக்கக் கூடிய 4 முக்கிய மாகாணங்களின் முன்னணி நிலவரம்: மாகாணம் முன்னிலை வாக்கு வித்தியாசம்
ஜார்ஜியா        பிடென்    1,096
பென்சில்வேனியா    பிடென்    5,587
நெவாடா        பிடென்    11,438
அரிசோனா        பிடென்    47,052

‘பொய்யா பேசிட்டு இருக்காரு’ நேரடி ஒளிபரப்பை நிறுத்திய அமெரிக்க டிவி சேனல்கள்:
தேர்தலில் பின்தங்க ஆரம்பித்ததுமே நேற்று முன்தினம் இரவு அதிபர் டிரம்ப் முதல் முறையாக நேரில் பேட்டி அளித்தார். அவரது 17 நிமிட பேச்சில்  ‘சட்டவிரோத ஓட்டுகள்’, ‘வெற்றியை அபகரித்து விட்டனர்’ என புலம்ப ஆரம்பித்து விட்டார். இந்த பேட்டியை முதலில் ஆர்வத்துடன் நேரடி ஒளிபரப்பு செய்த டிவி சேனல்கள், மீண்டும் மீண்டும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை டிரம்ப் கூறியதால் பாதியிலேயே நிறுத்தி விட்டனர். என்பிசி, ஏபிசி நியூஸ் சேனல்கள் பேட்டியின் பாதியிலேயே நேரடி ஒளிபரப்பை நிறுத்தின.

சிஎன்என் சேனலின் செய்தி தொகுப்பாளர் ஜேக் தப்பர், ‘‘எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் மேல் பொய் பேசிக் கொண்டிருக்கிறார்’’ என்றும் விமர்சித்தார். ‘அதிபர் பேச்சில் குறுக்கிடுவது மட்டுமில்லாமல், அதிபரையே சரி செய்ய வேண்டிய அசாதாரண நிலையில் நாம் மீண்டும் இருக்கிறோம்’ என மற்றொரு டிவி சேனல் தொகுப்பாளர் கூறினார்.

‘சில் டொனால்ட் சில்’ டிரம்ப் வார்த்தையாலே பதிலடி தந்த கிரேட்டா:
ஸ்வீடன் நாட்டைச் சேரந்த 17 வயதான பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா துன்பர்க், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடி வருகிறார். பருவ நிலை விவகாரத்தில் ஐநா சபையிலும் உலக தலைவர்களை தைரியமாக கடுமையாக தாக்கி பேசினார். இவரை டைம் இதழ் 2019ம் ஆண்டுக்கான சிறந்த நபராக  தேர்வு செய்தது. இதை கேலி செய்த டிரம்ப், ‘‘ரொம்ப அபத்தம். கிரேட்டா தனது கோபத்தை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஏதாவது பழைய நல்ல சினிமாவுக்கு ப்ரண்ட்சுடன் போக வேண்டும்! சில் கிரேட்டா சில்!’’ என கூறினார்.

அடுத்த 11 மாதத்திற்குப் பிறகு அதே வார்த்தைகளால் கிரேட்டா பதிலடி கொடுத்துள்ளார். ‘வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவும்’ என டெனால்ட் டிரம்ப்பின் டிவிட்டர் பதிவுக்கு பதிலளித்த கிரேட்டா, ‘ரொம்ப அபத்தம். டொனால்ட் தனது கோபத்தை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஏதாவது பழைய நல்ல சினிமாவுக்கு ப்ரண்ட்சுடன் போக வேண்டும்! சில் டெனால்ட் சில்!’ என கூறி உள்ளார்.

120 ஆண்டுக்குப் பிறகுஅதிகமான வாக்குப்பதிவு
அமெரிக்க வரலாற்றில் 120 ஆண்டுகளுக்குப் பிறகு, இம்முறை அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருப்பதாக யுஎஸ் தேர்தல் புராஜெக்ட் எனப்படும் தேர்தல் நிபுணத்துவம் பெற்ற இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
* இம்முறை 23,9 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
* இதில் 16 கோடி வாக்குகள் பதிவாகின. இதன் சதவீதம் 66.9.
* இதற்கு முன் 1900ம் ஆண்டு 73.7 சதவீத வாக்குகள் பதிவாகின.
* அதன் பின், அதிகப்படியான வாக்குப்பதிவு இம்முறையே.
* இதற்கு முன் 2016ல் 56 சதவீத வாக்குப்பதிவும், 2008ல் 58 சதவீத வாக்குகளும் பதிவாகின.
* இம்முறை அதிகபட்சமாக மின்னசோட்டா மாகாணத்தில் 79.2 சதவீதமும், மைனேவில் 78.6 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

மிச்சிகன், ஜார்ஜியாவில் டிரம்ப் வழக்கு தள்ளுபடி
அதிபர் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக டிரம்ப் பிரசாரக்குழு இதுவரை 6 வழக்குகளை தொடுத்துள்ளது. பென்சில்வேனியாவில் உச்ச நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றத்திலும், மிச்சிகன், ஜார்ஜியா, நெவாடா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களிலும் வழக்குகள் தொடுத்துள்ளது.
* மிச்சிகனில் மாகாண செயலாளர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவில்லை என்பதால் எஞ்சிய வாக்குப்பெட்டிகளை எண்ணும் பணியை நிறுத்த வேண்டும் எனவும், ஜார்ஜியாவில் வாக்குப்பதிவு நேரம் தாண்டிய பிறகும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதாகவும், அந்த வாக்குகளும் எண்ணப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
* இதில், மிச்சிகன் மற்றும் ஜார்ஜியா வழக்குகளை நீதிபதிகள் நேற்று தள்ளுபடி செய்தனர்.
* விஸ்கான்சின் மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
* நெவாடாவில் உள்ளூர் மக்கள் போர்வையில் 10,000 வாக்குகள் சட்ட விரோதமாக போடப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
* விஸ்கான்சின், நெவாடா வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.
* பென்சில்வேனியாவில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு வந்த வாக்குப்பெட்டிகளை எண்ணக் கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையும் உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here