கோலாலம்பூர்:
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளத்தில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் மனதைப் புண்படுத்தும் பதிவை வெளியிட்டதை ஒப்புக்கொண்ட 48 வயது பெண்ணுக்குச் செஷன்ஸ் நீதிமன்றம் RM12,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.
படைப்புத் துறையில் பகுதிநேரப் பணியாளராகப் பணிபுரியும் யோ லீ யின் (Yeo Li Yin) என்ற அந்தப் பெண் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், 10 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி முகமட் இல்மாமி அஹமட் உத்தரவிட்டார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று, எதிரி “Liyin Yeo” என்ற ட்விட்டர் (தற்போது ‘X’) கணக்கைப் பயன்படுத்தி, பிறர் மனதைப் புண்படுத்தும் நோக்கத்துடன் மனவேதனை தரும் கருத்துகளைப் பதிவேற்றம் செய்துள்ளார். இப்பதிவு ஜூன் 22, 2023 அன்று பிற்பகல் 2:15 மணியளவில் புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் பார்க்கப்பட்டது.
இவர் மீது 1998 தொடர்பு மற்றும் பல்லூடகாச் சட்டத்தின் பிரிவு 233(1)(a)-இன் கீழ் வழக்குப் பதியப்பட்டது. இக்குற்றத்திற்கு அதிகபட்சமாக RM50,000 வரை அபராதம், ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்பிருந்தது.





















