ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் அணியிடம் அமெரிக்க வாழ் தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்குகளின் பலத்தை கடந்து அவருக்கு 279 தேர்தல் சபை வாக்குகள் இருப்பதாக பிபிசி கணித்துள்ளது.

77 வயதாகும் ஜோ பைடன் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் அதிக வயதில் பதவி ஏற்பவர் ஆகவுள்ளார். அமெரிக்காவில் 2021ஆம் ஆண்டில் அதிபராவதற்கு தகுதி பெற்றுள்ள ஜோ பைடனின் அரசில் துணை அதிபராகும் தகுதியைப் பெற்றிருக்கிறார் கமலா ஹாரிஸ்.

இதன் மூலம், அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு தேர்வான பெண்ணாகவும், முதல் கறுப்பின மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண்ணாகவும் உருவெடுத்துள்ளார் தமிழகத்தை தாய்வழிப் பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ்.

அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுற்று கடந்த நான்கு நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ள நிலையில், இதுதொடர்பாக அமெரிக்காவில் வசித்து வரும் தமிழர்கள் பிபிசி தமிழிடம் பேசினர்.

“மறக்க முடியாத தருணம்”

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் பெற்றுள்ளதும், இதன் மூலம் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராவதும் தனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்று அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தை சேர்ந்த மணி குமரன் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக டிரம்பின் ஆட்சிக்காலத்தில் பங்குச் சந்தைகள் சிறப்பான முன்னேற்றத்தை கண்டாலும், இனவெறுப்பு அதிகமாகி நாட்டில் இன ஒற்றுமை குறைந்துபோக டிரம்ப் பெரும் காரணமாக இருந்தார். மக்களை எப்போதும் பிரித்து பேசி ஒருவரையொருவருக்கு எதிரியாக்கி, மக்களை ஒன்றுபடுத்துவதற்கு பதில் டிரம்ப் பிளவுபடுத்தினார். மேலும், அவர் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை மிகவும் மோசமாக கையாண்டார். இருப்பினும், சீனாவுடனான பிரச்சனையை டிரம்ப் திறம்பட எதிர்கொண்டார்” என்று அவர் கூறியுள்ளார்.

டிரம்புக்கும் ஜோ பைடனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைவாக உள்ளதால், ஜனநாயக கட்சி தலைமையிலான நிர்வாகத்துக்கு நடுநிலையுடன் செயல்பட வேண்டிய கடமை உள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.

“கொரோனா வைரஸ் பிரச்சனையை எதிர்கொள்ள பைடன் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தி விடுவார். அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாக உழைக்கும் வர்த்தகத்தினரில் பலர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். எனவே, மக்களின் அச்சத்தை போக்கும் வகையிலேயே பைடனின் நடவடிக்கை இருக்க வேண்டும். அதே சமயத்தில் வெள்ளை இன மக்கள் மத்தியிலும் ஒருவித அச்சம் நிலவுகிறது. எனவே, இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு நடுநிலையான ஆட்சியை பைடன் வழங்க வேண்டியது அவசியம்” என்று மணி குமரன் மேலும் கூறியுள்ளார்.

“அமெரிக்காவுக்கு விடியல் பிறந்துள்ளது”

3 – 4 நாட்கள் தேர்தல் முடிவுக்காக பகல் – இரவு பாராது காத்திருந்து, களைத்து போயிருந்த நேரத்தில், மகிழ்ச்சியளிக்கக் கூடிய முடிவு வந்துள்ளதாக அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சியில் பேராசிரியராக பணியாற்றிவரும் ஆர்.சி. சரவண பவன் பிபிசி தமிழிடம் கூறினார்.

“டிரம்ப் இனிமேல் நாட்டின் அதிபராக இருக்கமாட்டார் என்பது அமெரிக்காவுக்கு புதிய விடியல் போல் உள்ளது. நாட்டை பிளவுப்படுத்த முயன்ற டிரம்பின் நான்காண்டுகால ஆட்சி ஒரு கெட்ட கனவுபோல உள்ளது. இனி அமெரிக்கா எப்போதும்போல ஒற்றுமையுடன் உலகுக்கு உதாரணமான நாடாக திகழும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

“பைடன், கமலா மீது நம்பிக்கை உண்டு”

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மட்டுமின்றி பல மாதங்களாக நிலவி வந்த மனதை வாட்டும் அரசியல் சூழ்நிலை நல்ல முடிவுக்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக பென்சில்வேனியா மாகாணத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற மருத்துவரான சரோஜா கூறினார்.

“புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனும், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸும் திறம்பட நிர்வாகத்தை நடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். அமெரிக்கா முழுவதும் வாழும் தமிழர்கள் உள்பட அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருவதோடு ஆதரவாகவும் இருக்கிறோம். எனினும், முறையாக வரியை செலுத்துவதும், தங்களது தேவைகளை புதிய அரசிடம் தெரிவித்து புரியவைப்பதும் மக்களின் கடமை” என்று அவர் கூறினார்.

அதே பென்சில்வேனியா மாகாணத்தில் மருத்துவராக இருக்கும் சோம இளங்கோவன், “புதியதொரு அமெரிக்கா படைக்கப்பட்டுள்ளது. இனி அமெரிக்காவில் நிறவெறி, மதவெறி குறையும். செல்வந்தர்கள் வரி செலுத்துவார்கள். ஏழைகளுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் வாழ்வு கிடைக்கும். அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த பெண்ணொருவர் துணை அதிபராக உள்ளதை பெரும் சாதனையாக கருதுகிறேன். மேலும், அமெரிக்காவில் மீண்டும் அறிவாளிகள் மதிக்கப்படுவார்கள். நோய்த்தடுப்பு மருந்துகள் விரைவில் வந்து சேரும்” என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

“இன்றைக்குதான் தீபாவளி”

பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் தேர்வு இன்றைய தினத்தை தீபாவளி போன்று உணர வைத்துள்ளதாக பிபிசி தமிழிடம் பேசிய மேரிலாந்தை சேர்ந்த செல்வம் – ராஜி தம்பதியினர் தெரிவித்தனர்.

“அமெரிக்காவை அழிவுப்பாதையை நோக்கி கொண்டு சென்றுகொண்டிருந்த அரசிடம் இருந்து மனிதநேயமும், மக்களிடம் உண்மையான அக்கறையும் கொண்டுள்ள தலைவர் ஒருவரின் தலைமையில் நாடு செயல்பட போகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பைடன் – கமலா ஹாரிஸ் நல்லாட்சி செய்ய வேண்டும் என்பது எங்களது விருப்பம். குறிப்பாக, ஆப்பிரிக்க மற்றும் தமிழக பின்னணியை கொண்ட ஒருவர் நாட்டின் துணை அதிபராக போகிறார் என்று நினைக்கும்போது மனம் துள்ளுகிறது” என்று அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here