சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. நேற்று முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களில் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பேருக்கும், மண்டல, மகரவிளக்கு நாளில் 5 ஆயிரம் பேருக்கும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று கோவிலுக்கு வந்தவர்கள் வைத்திருந்த கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழை நிலக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் சரிபார்த்தனர். பின்னர் அவர்கள் முன்னேறி செல்ல அனுமதிக்கப்பட்டனர். சந்தேகப்படும் வகையில் கொரோனா அறிகுறியுடன் யாராவது வந்தால் அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
நேற்று நிலக்கல்லில் நடத்திய மருத்துவ பரிசோதனையில் சென்னையில் இருந்து வந்த ஒரு தமிழக பக்தருக்கும், கேரள மாநிலம் புனலூரை சேர்ந்த ஒரு பக்தருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால், அவர்கள் மலையேறி செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாறாக அவர்கள் 2 பேரும் கோணியில் உள்ள மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டனர்.
கோவிலில் 18-ம் படி முன்பு ஏராளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கவச உடை மற்றும் முககவசம் அணிந்து பக்தர்களுக்கு அரசு விதிமுறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.