மீட்கப்பட்ட சிலைகள் ஆலயத்தில் ஒப்படைப்பு

சென்னை : லண்டனில் இருந்து 42 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட தமிழக கோவில் சிலைகளை மத்திய கலாசார துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலத்தில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து 1978ம் ஆண்டில் ராமர் சீதை லட்சுமணன் சிலைகள் திருடு போயின. இந்த சிலைகள் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு கடத்தப்பட்டது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.
latest tamil news
இதுகுறித்த வரலாறு மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் லண்டனில் உள்ள இந்திய துாதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். துாதரக அதிகாரிகள் லண்டன் போலீசில் புகார் அளித்தனர். இந்த சிலைகள் லண்டனில் உள்ள ‘டீலர்’ ஒருவரிடம் இருப்பது பற்றி சிங்கப்பூரில் வசித்து வரும் சிலைகள் மீட்பு பணிக்குழு நிர்வாகி விஜயகுமார் என்பவர் வாயிலாக போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அந்த டீலரிடம் லண்டன் போலீசார் விசாரித்தனர். அவர் சிலைகளை ஒப்படைத்து விடுவதாக கூறினார். அதன்படி 42 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன ராமர் உள்ளிட்ட மூன்று சிலைகளும் செப்டம்பரில் மீட்கப்பட்டன. அதன்பின் பிரிட்டன் அரசு சிலைகளை மத்திய அரசிடம் முறைப்படி ஒப்படைத்தது.

அந்த சிலைகளை டில்லியில் தொல்லியல் துறை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய கலாசார துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

பின் மத்திய அமைச்சர் பிகலாத் சிங் படேல் கூறுகையில் ”பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளிட்ட கலைப் பொக்கிஷங்களை மீட்டுள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here