ஹீரோவின் மனைவிக்கு பிடிக்காததால் என்னை படத்தில் இருந்து நீக்கினர்

நடிகை டாப்சி சினிமா அனுபவங்கள் பற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “நான் சினிமாவுக்கு வந்த புதிதில் மோசமான அனுபவங்களை சந்தித்தேன். ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை. இதனால் படத்தில் இருந்தே என்னை நீக்கி விட்டனர்.
இன்னொரு படத்தில் நடித்தபோது நான் பேசிய வசனம் ஹீரோவுக்கு பிடிக்கவில்லை. அந்த வசனத்தை மாற்றும்படி சொன்னார். நான் மறுத்து விட்டேன். உடனே டப்பிங் கலைஞரை வைத்து எனக்கு தெரியாமலேயே அந்த வசனத்தை பேச வைத்து விட்டார்கள்.
வேறொரு படத்திலும் மோசமான சம்பவத்தை எதிர்கொண்டேன். அந்த படத்தில் நான் வரும் அறிமுக காட்சி ஹீரோவின் அறிமுக காட்சியை விட சிறப்பாக இருந்தது. இதனால் அந்த ஹீரோ தலையிட்டு எனது அறிமுக காட்சியை வேறுமாதிரி மாற்ற வைத்து விட்டார்.
ஒரு படத்தில் நடித்தபோது ஹீரோவின் முந்தைய படம் சரியாக ஓடவில்லை என்பதற்காக எனது சம்பளத்தை குறைக்க சொன்னார்கள். இப்படி கசப்பான நிகழ்வுகள் நடந்துள்ளன. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கும் நடிகைகளை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க கதாநாயகர்கள் தயங்கும் நிலையும் உள்ளது”. இவ்வாறு டாப்சி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here