தகவல் தொடர்புக்காக பிஎஸ்எல்வி-சி50 மூலம் சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள்

தகவல் தொடர்பு சேவைக்கான அதிநவீன சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் மூலம் நாளை (டிச.17) விண்ணில் ஏவப்படவுள்ளது.

தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் இதுவரை 41 செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதில் 2011- ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-12 செயற்கைக் கோள் ஆயுட்காலம் தற்போது முடிந்துவிட்டது.

அதற்கு மாற்றாக அதிநவீன சிஎம்எஸ்-1 (ஜிசாட்-12ஆர்) செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த செயற்கைக் கோள் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2- ஆவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி – சி50 ராக்கெட் மூலம் நாளை (டிச.17) மாலை 3.41 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

எரிபொருள் நிரப்புதல் உட்பட ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்-டவுன் இன்று (டிச.16) தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் சுமார் 1,400 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள். இதில் உள்ள விரிவுபடுத்தப்பட்ட சி பேண்ட் அலைக்கற்றைகள் இந்திய நிலப்பரப்பு பகுதிகளுடன், அந்தமான்-நிகோபார்  லட்சத்தீவுகள் வரை தற்போது உள்ள தொலைதொடர்பு சேவையை மேம்படுத்தி வழங்க உதவும்.

அதனுடன் தொலை மருத்துவம், இணையவழிக் கல்வி, பேரிடர் கண்காணிப்பு, செல்போன் சேவைக்கு உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இந்த மாத இறுதியில் சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here