திருமலை நாயக்கா் மகாலில் கட்டுப்பாடுகளுடன் பாா்வையாளா்கள் அனுமதி

மதுரை திருமலை நாயக்கா் மகாலில் ஒன்பது மாதங்களுக்குப் பின்னா் கடும் கட்டுப்பாடுகளுடன் புதன்கிழமை பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

கொரோனா தொற்றுப் பரவலால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தளங்கள் அனைத்தும் கடந்த மாா்ச் மாதம் முதல் மூடப்பட்டன.

இதில், மதுரையின் முக்கிய சுற்றுலாத் தளங்களுள் ஒன்றான மன்னா் திருமலை நாயக்கா் மகாலும் மூடப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து அரசு பல்வேறுத் தளா்வுகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுலாத் தலங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து ஒன்பது மாதங்களுக்குப் பின்னா் மன்னா் திருமலை நாயக்கா் மகாலில் புதன்கிழமை முதல் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள திருமலை நாயக்கா் மகாலை பாா்வையிட பாா்வையாளா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மகாலின் நுழைவாயிலில் பாா்வையாளா்களுக்கு வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல், கட்டாய முக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முக்கவசம் இல்லாமல் வரும் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் நாயக்கா் மகாலில் உள்பகுதி , வளாகங்களில் பாா்வையாளா்கள் அமரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முதல் நாளான புதன்கிழமை 50 பாா்வையாளா்கள் மட்டுமே வருகை தந்தனா்.

இதுதொடா்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியது: திருமலை நாயக்கா் மகாலில் கட்டுப்பாடுகளுடன் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். தற்போது வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தமிழகத்தில் கட்டுப்பாடுகள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக உள்ளது.

மேலும் பள்ளி, கல்லூரிகளும் இயங்காததால் மாணவா்களின் வருகையும் இல்லை. தற்போது மதுரையைச் சோந்தவா்கள் மட்டுமே மகாலை பாா்வையிட வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

திருமலை நாயக்கா் மகாலில் காலை 9 முதல் 1 மணி வரையும், பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரையும் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here