கோத்தா கினபாலு:
சபா, கோத்தா கினபாலுவில் 13 வயது பள்ளி மாணவி ஒருவர், சக மாணவிகள் ஐந்து பேரால் மிகக் கொடூரமாகக் கூட்டுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான ஒரு நிமிடக் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பொதுமக்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து, மாநகரக் காவல்துறை சம்பந்தப்பட்ட 5 மாணவிகள் மீதும் கலகம் விளைவித்தல் குற்றச்சாட்டின் கீழ் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, பாதிக்கப்பட்ட மாணவியும் தாக்குதல் நடத்திய மற்ற ஐந்து மாணவிகளும் வாட்ஸ்அப் (WhatsApp) குழு ஒன்றின் மூலமாகப் பழகி வந்துள்ளனர். அந்தத் தளத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடு மற்றும் தனிப்பட்ட பகை காரணமாகவே, இந்த வன்முறைத் தாக்குதல் அரங்கேறியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
“ஐந்து மாணவிகளால் இரக்கமின்றி தாக்கப்பட்ட அந்த 13 வயது சிறுமிக்குத் தோள், கால் மற்றும் காதுப் பகுதிகளில் மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தாக்குதல் சம்பவம் குறித்துப் பெற்றோரிடமோ அல்லது காவல்துறையிடமோ வாய் திறக்கக் கூடாது என அச்சிறுமிக்கு அம்மாணவிகள் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்” என்று, கோத்தா கினபாலு பதில் போலீஸ் துணைத் தலைவர் சூப்பிரண்டெண்ட் சைட் லொட் சைட் அப்துல் ரஹ்மான் கூறினார்.

மிரட்டலுக்குப் பயந்து மௌனமாக இருந்த மாணவியின் குடும்பத்தினருக்கு, சமூக வலைத்தளங்களில் பரவிய அந்த ஒரு நிமிடக் கொடூரக் காணொளி (Viral Video) மூலமாகவே உண்மை தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மே 23-ஆம் தேதி பெற்றோர்களால் அதிகாரப்பூர்வமாகப் போலீஸ் புகார் அளிக்கப்பட்டது.
தற்போது அந்த அதிர்ச்சித் தரும் காணொளியை மிக முக்கியத் தடயமாகக் கொண்டுள்ள கோத்தா கினபாலு மாவட்டப் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட அந்த ஐந்து மாணவிகளையும் அடையாளம் கண்டு, அவர்கள் மீது மலேசியத் தண்டனைச் சட்டம் பிரிவு 147-இன் கீழ் (கலகம் விளைவித்தல் மற்றும் வன்முறையைக் கையாளுதல்) வழக்குப் பதிவு செய்து தங்களின் அதிரடி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
பள்ளிப் பருவத்திலேயே மாணவிகள் குழுவாகச் சேர்ந்து சக மாணவி மீது இத்தகைய வன்முறையை ஏவியுள்ள இச்சம்பவம், மலேசியக் கல்வித் துறை மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.





















