அபுஜா-
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவிப்பதோடு, சிறுவர் சிறுமிகளைக்க் கடத்திச் சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாகக்க் கொண்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் பள்ளிக்கூடத்தில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் 450-க்கும் அதிகமானோரை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
இதையடுத்து, பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட குழந்தைகளை தேடும் பணியில் போலீசாரும், ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், பள்ளிக்கூடம் அமைந்துள்ள கட்சினா மாகாணத்திற்கு அருகே உள்ள சம்பரா மாகாணத்தில் உள்ள ருகு காட்டுப்பகுதியில் மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்தி வைத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக, மாணவர்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த காட்டுப்பகுதியை நைஜீரிய பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது போகோ ஹராம் பயங்கரவாதிகளில் பிடியில் இருந்த 344 மாணவர்களைப் பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
பாதுகாப்பு படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள் மாணவர்களை விட்டுவிட்டு காட்டுப்பகுதியில் இருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
344 மாணவர்கள் மீட்கப்பட்ட போதும் மேலும், சில மாணவர்களை பயங்கரவாதிகள் தங்களுடன் அழைத்து சென்றிருக்கலாம் அல்லது கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால், எஞ்சிய சில மாணவர்களை தேடும் பணியை பாதுகாப்புப் படையினர் துரிதப்படுத்துள்ளனர்.
இதையடுத்து, பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட 344 மாணவர்களும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.