காஷ்மீர் தேர்தல் முப்தி,அப்துல்லா குடும்பங்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி – பாஜக தலைவர் பேச்சு

ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றது. 
மொத்தமுள்ள 280 மாவட்ட கவுன்சில் தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்தலில் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லாவின் அரசியல் கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட 7 பிராந்திய கட்சிகள் இணைந்து அமைத்துள்ள குப்கர் கூட்டணி, காங்கிரஸ், பாஜக மற்றும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 181 பேர் போட்டியிட்டனர். 
இந்த தேர்தலில் 110 இடங்களை குப்கர் கூட்டணி கைப்பற்றியிருந்தது. பாஜக 75 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
காங்கிரஸ் 26 இடங்களை கைப்பற்றியது. மாவட்டங்களைப் பொருத்தவரை குப்கர் கூட்டணி 13 மாவட்டங்களிலும், பாஜக 6 மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தலில் குப்கர் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியபோதும் பாஜக தனிக்கட்சியாக 75 இடங்களைக் கைப்பற்றியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதற்குப் பின்னர் நடந்த தேர்தல் என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் மிகுந்த அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பாஜக தலைவர் தருண் சுங் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், நடந்து முடிந்த இந்த மாவட்ட கவுன்சில் தேர்தல்கள் முப்தி, அப்துல்லா குடும்பங்களுக்கான பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியாகும். ஜம்மு-காஷ்மீரில் வருங்கால பாஜக முதல்வரை நான் பார்க்கிறேன்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here