கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் அச்சம்- நாமக்கல்லில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து கேரள மாநிலத்திலும் பறவைக் காய்ச்சல் பரவுவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 26 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் சில பகுதிகளில் ஏராளமான காக்கைகள் இறந்தன. இதையடுத்து, சுகாதாரத் துறையினர் நடத்திய பரிசோதனையில், அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில், கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் தாக்கம் கண்டறியப் பட்டுள்ளது. அங்கு ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் வாத்துப்பண்ணைகள் அதிகம் உள்ளன. வாத்துகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உயர்பாதுகாப்பு நோய்ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 8 மாதிரிகளில் 5 மாதிரி களில் பறவைக்காய்ச்சல் (எச்5என்8) தொற்று இருப்பது உறுதியானது.

இதைத் தொடர்ந்து கேரள கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். நோய்ப் பரவலைத் தடுக்க சுமார் 36 ஆயிரம் வாத்துகளை அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நோய் தாக்கம் உள்ள பகுதி கட்டுப் பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வெளி இடங்களில் இருந்து வாத்துகள் தீவனங்கள் அப்பகுதிக்கு வரவும், அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் மனிதர்கள் யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்பதை அறியும் பணியிலும் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னெச் சரிக்கையாக நோய்த் தடுப்பு நட வடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுஉள்ளனர்.

இதுதொடர்பாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் கூறியதாவது:

தமிழகத்தில் பறவைக் காய்ச்சலால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இதனால், இங்கிருந்து முட்டைகளை அனுப்புவதில் சிக்கல் இருக்காது. எனினும், கேரள மாநிலத்தில் இரு மாவட்டங்களில் நோயின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் முட்டை கொள்முதல் குறைய வாய்ப்புள் ளது. இதனால் விலை குறையும். தமிழக கோழிப்பண்ணைகளில் ஆண்டு முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கே.மோகன் கூறும் போது, ”தமிழகத்தைப் பொருத்தவரை இங்குள்ள பண்ணைகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கை எப்போதும்போல் மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.

தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணி யம் கூறும்போது, ”கேரள மாநிலம் ஆலப் புழா மாவட்டத்தில் ஒரு கி.மீ. சுற்றளவில் குறிப்பாக வாத்து இனத்தில்தான் நோய்த் தாக்கம் காணப்படுகிறது. அதில் இருந்து பண்ணைக் கோழிகளுக்கு பரவ வாய்ப்பில்லை. கோழிப்பண்ணை தொடர்பான எதுவும் கேரளாவில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதில்லை. இங்கிருந்து முட்டை மற்றும் கோழிகள் அனுப்புவதில் எந்த பாதிப்பும் இல்லை” என்றார்.

தமிழக – கேரள எல்லைகளான கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 26 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்களில் குளோரின் டை ஆக்ஸைடு மருந்து தெளிக்க கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் ஏ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் சுற்றுவட்டார கோழிப்பண் ணைகளில் நாள்தோறும் சுமார் 2 கோடி முட்டைகள் மற்றும் பிராய்லர் கோழிகள் கேரளாவுக்கு செல்கின்றன.

பேரிடராக அறிவித்தது கேரள அரசு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் உள்ளிட்ட சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் தாக்கம் உள்ளது. இந்நிலையில், பறவைக் காய்ச்சலை பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது.

கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பறவைக் காய்ச்சல் பேரிடராக அறிவிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும் பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் உஷார் நிலைக்கான உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கேரள அரசு கூறியுள்ளது. குட்டநாடு, கார்த்தகாபள்ளி தாலுகாக்களில் பறவைகளின் இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விற்பனைக்கும் பயன்பாட்டுக்கும் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கவலைப்படத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here