கோட்சேவுக்கு நூலகம் அமைத்த இந்து மகாசபா

நாதுராம் கோட்சேவின் வாழ்க்கை, அவரது சித்தாந்தத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நூலகத்தை மத்தியப் பிரதேசத்தில் அகில் பாரதிய இந்து மகாசபா திறந்துள்ளது.

மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் வாழ்க்கை, அவரது சித்தாந்தத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நூலகத்தை அகில் பாரதிய இந்து மகாசபா ஞாயிற்றுக்கிழமை குவாலியரில் திறந்தது. ‘கோட்சே ஞான ஷாலா’ எனப்படும் அந்த நூலகம், தவுலத் கஞ்சில் உள்ள மகாசபாவின் அலுவலகத்தில் திறந்து வைக்கப்பபட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் படுகொலையை கோட்சே எவ்வாறு செய்தார், அவரது கட்டுரைகள் , அவரது உரைகள் பற்றிய இலக்கியங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

மகாசபாவின் துணைத் தலைவர் ஜெய்வர் பரத்வாஜ் நூலகம் தொடர்பாக கூறுகையில், “கோட்சே என்ற உண்மையான தேசியவாதியை உலகிற்கு முன்வைக்க நூலகம் திறக்கப்பட்டது. அவர், பிரிக்கப்படாத இந்தியாவுக்காக நின்று இறந்தார். இன்றைய அறியாத இளைஞர்களில் கோட்சே நின்ற உண்மையான தேசியவாதத்தை ஊக்குவிப்பதே நூலகத்தின் நோக்கம்.

ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இந்தியா பிளவுபட்டுள்ளது. இருவரும் ஒரு தேசத்தை ஆள விரும்பினர்; அதேநேரத்தில் கோட்சே அதை எதிர்த்தார்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, கோட்சேவுக்கு கோயில் ஒன்று இதே குவாலியர் மகாசபா அலுவலகத்தில் அமைக்கப்பட்டது. காங்கிரஸின் எதிர்ப்பைத் தொடர்ந்து இது அகற்றப்பட்டது.

இதற்கிடையே, இந்தியப் பிரிவினை மகாத்மா காந்தியின் தவறு என்று அம்மாநில சபாநாயகர் ராமேஸ்வர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். “இந்தியாவை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பதில் முகமது அலி ஜின்னா வெற்றி பெற்றது மகாத்மா காந்தியின் தவறு” என்று அவர் போபாலில் செய்தியாளர்களிடம் கூறினார். இது தற்போது புதிய சர்ச்சையாக மாறி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here