கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, சுதந்திர தினம், திருமண வாழ்த்துகள் என, வாழ்த்து தெரிவிக்கும் நடைமுறை இருந்தது.
கிராமம் முதல், நகரம் வரையிலான தபால் அலுவலகங்களில் வாழ்த்து அட்டைகள் குவிந்தன. நகரங்களில் வாழ்த்து அட்டைகளை, ‘டெலிவரி’ செய்ய தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டனர்.
வாழ்த்து அட்டைகளால் அச்சகர்கள், புகைப்பட கலைஞர்கள், தபால்துறை, வாழ்த்து அட்டை விற்பனையாளர்கள் பலனடைந்தனர்.
மொபைல்போன் புழக்கத்துக்கு வந்த பின், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்., வாயிலாக பகிர்ந்துகொள்ள துவங்கினர்.
இதை தொடர்ந்து, வாழ்த்து அட்டைகளின் மோகம் மெல்ல குறைய துவங்கி, இன்று ஒரு சிலர் மட்டுமே தபாலில் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
எலக்ட்ரானிக் கருவிகள் வாயிலாக வாழ்த்துகள் தெரிவித்து கொள்வது எளிமையானதுதான். ஆனால், சீக்கிரம் மறந்து போகும். தபாலில் அனுப்பும் வாழ்த்து அட்டைகள் நிலையானவை; பத்திரப்படுத்தக்கூடியவை.
அவற்றை பார்க்கும்போதெல்லாம் நட்பு, உறவு, அன்பின் வெளிப்பாடு தெரியும். தபால்துறை நடவடிக்கை எடுத்தால், மறந்து போன வாழ்த்து அட்டைகள் அனுப்பும் நடைமுறையை மீண்டும் துவக்கலாம்.
பள்ளிகள், கல்லுாரிகளுக்கு சென்று, மாணவர்கள், ஆசிரியர்களிடம் வாழ்த்து அட்டையின் மகிமைகளை எடுத்துக்கூற வேண்டும். தபால்துறை மீதான ஆர்வத்தைத் துாண்ட வேண்டும் என்கிறார் ஓர் அஞ்சல்காரர் .