மாமல்லபுரம்:
கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் காணும் பொங்கல் தினமான நேற்று மாமல்லபுரம் கடற்கரை பகுதி, கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்கள் பயணிகள் நடமாட்டம் இன்றி களையிழந்து வெறிச்சோடி காணப்பட்டன. சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் மாமல்லபுரம் கடற்கரை சாலையில் உள்ள சங்குமணி கடைகள், சிற்பகலை கூடங்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் கடற்கரைக்கு செல்லாத வண்ணம் மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்லும் 2 இடங்களில் மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி உள்ளிட்ட போலீசார் தடுப்புகள் வைத்து கடற்கரைக்கு செல்ல முயன்ற வாகனங்களை திருப்பி அனுப்பினர்.
3 நாட்கள் தடை முடிந்து புராதன சின்னங்கள் திறந்தவுடன் அவற்றை வந்து பார்க்குமாறு நேற்று மூடப்பட்ட தகவல் தெரியாமல் வந்த பயணிகள் சிலருக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.
இந்த ஆண்டு காணும் பொங்கல் கொண்டாட்ட தடையால் மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் உள்ள முக்கிய சாலைகளில் சுற்றுலா வாகன போக்குவரத்து இல்லாததால் அந்த சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மொத்தத்தில் இந்த வருட காணும் பொங்கல் கொண்டாட்டம் இல்லாத ஒரு நகரமாகவே மாமல்லபுரம் காட்சி அளித்தது.
நேற்று காணும் பொங்கல் தடையால் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் சுற்றுலா வழிகாட்டிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், நடைபாதை வியாபாரிகள், ஓட்டல் நிர்வாகங்கள் உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.