4 மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

4 மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்த நிலையில், தங்கச்சிமடத்தில் மீனவ சங்கத்தினர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது, இலங்கை கடற்படையினரை கண்டித்தும், உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியும் கடலோர மாவட்ட மீனவர்கள் நாளை மறுநாள் முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இலங்கையில் உள்ள மீனவர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவந்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழக மீனவர்கள் நான்கு பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டிருப்பதாகவும், தாக்குதலில் பாதிப்படைந்த விசைப்படகிற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், அவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரை அழைத்து வலுவான எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டதாகத் கூறப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் உள்ள இலங்கை தூதரையும் அழைத்து மத்திய அரசு தரப்பில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் நான்கு மீனவர்கள் உயிரிழந்த தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இதற்கிடையே மீனவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை குழுக்களை அமைத்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. அதிபர் ராஜபக்சே உத்தரவுப்படி ஒரு குழுவும், கடற்தொழில் அமைச்சகத்தின் கீழ் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த மீனவர்களின் உடல்களைப் பிரேத பரிசோதனை செய்யாமல் இந்தியாவிடம் ஒப்படைக்கவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகப் புதிய தலைமுறையிடம் பேசிய இலங்கை கடற்தொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here