கொரோனாவை அழிக்க முடியாது… சமூக இடைவெளி எல்லாம் சும்மா… பிரேசில் அதிபர் தடாலடி பேச்சு

பிரேசிலியா: கொரோனாவை அழிக்க முடியாது என்றும் கொரோனா தொற்றுடன் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.

உலகில் கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதித்த நாடுகளில் ஒன்றாகப் பிரேசில் உள்ளது. அந்நாட்டில் அதிபராக உள்ள ஜெய்ர் போல்சனாரோ, கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை எடுக்க மறுத்து வருகிறார்.

அந்நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு, மாஸ்க் கட்டுப்பாடு போன்றவற்றை விதிக்க ஜெய்ர் போல்சனாரோ தொடர்ந்து மறுத்து வருகிறார். பிரேசில் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விரைவாக மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது.

இந்நிலையில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “கொரோனா வைரசை அழிக்க முடியாது. அது நம்முடனேயே தொடர்ந்து இருக்கும். கொரோனாவைக் கட்டுப்படுத்த விதிக்கப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் எந்த விதத்திலும் நமக்குப் பயன் தராது. கொரோனாவுடன் வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

பிரேசில் நாடு தேவையான தடுப்பூசிகளைப் பெறுவதிலும் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. சுமார் 21 கோடி மக்கள் தொகையை கொண்ட பிரேசில் நாட்டிற்கு தற்போதுவரை 15 லட்சத்திற்கும் குறைவான மக்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ளவில்லை என்றால் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் இதனால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்றும் அந்நாட்டின் சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதிலும் பிரேசில் அரசுக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது. பிரேசில் நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பிரேசில் நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளைத் தந்து இந்தியா உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கடிதம் எழுதினார். இதையடுத்து சுமார் 20 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் பிரேசிலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 60,301 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மொத்தம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 90.60 லட்சமாக அதிகரித்துள்ளது. உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிக மக்களை இழந்த நாடாகப் பிரேசில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டும் 1,439 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.21 லட்சத்தை தாண்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here