காஜாங்:
முறையான அடையாள ஆவணங்கள் இல்லாத காரணத்தால் தங்களின் வாழ்நாளில் ஒருமுறைகூட பள்ளிப் பக்கமே ஒதுங்காத 6 உடன்பிறப்புகளுக்கு கல்விக்கான விடிவுகாலத்தை ஏற்படுத்த, மலேசியக் கல்வி அமைச்சு (MoE) மற்றும் தேசியப் பதிவுத் துறை (NRD) ஆகிய நிறுவனங்கள் இணைந்து அதிரடி கூட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை ‘ஹரியான் மெட்ரோ’ நாளிதழில் இந்த ஏழைக் குடும்பத்தின் அவல நிலை குறித்து வெளியான செய்தியைத் தொடர்ந்து, அரசாங்க அதிகாரிகள் உடனடியாகச் செயல்பாட்டில் இறங்கினர்.
நேற்று, கல்வி அமைச்சு, தேசியப் பதிவுத் துறை, சிலாங்கூர் ஜகாத் வாரியம் (Selangor Zakat Board), உலு லங்காட் மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் உலு லங்காட் நாடாளுமன்ற அலுவலகப் பிரதிநிதிகள் ஆகியோர் கூட்டாக அக்குடும்பத்தின் வீட்டிற்கு நேரில் சென்று, அவர்களின் அவசரத் தேவைகள் மற்றும் கல்வித் தேவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
பாதிக்கப்பட்ட 6 முதல் 16 வயதுக்குட்பட்ட அந்த 6 பிள்ளைகளுக்கும், அவர்களின் தாயாருக்கும் முறையான ஆவணங்கள் இல்லாததே அவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் போனதற்கு முக்கியக் காரணம் என்பதால், அவர்களின் குடியுரிமை மற்றும் ஆவண நிலையைச் சரிசெய்து, பிள்ளைகளை விரைவில் பள்ளியில் சேர்ப்பதற்கான பணிகளைப் பதிவுத் துறையும் கல்வி அமைச்சும் முடுக்கிவிட்டுள்ளன.
அரசாங்க அதிகாரிகளின் இந்தத் திடீர் வருகையும் ஆதரவும் தங்களுக்குப் புதிய நம்பிக்கையைத் தந்துள்ளதாகக் கண்ணீருடன் கூறினார் 16 வயதுடைய மூத்த மகன் ஹைருல்.
“எனக்கும் என் தம்பி, தங்கைகளுக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை. ஆவணங்களைச் சரிசெய்ய அதிகாரிகள் உதவுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆவணங்கள் இல்லாததால் வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது. முறையான அடையாள அட்டை இருந்தால், நான் தைரியமாக நல்ல வேலைக்குச் சென்று என் தாயாரைக் காப்பாற்றுவேன்,” என்று ஹைருல் உருக்கமாகக் கூறினார்.
ஹைருல் தனது சிறு வயதில் வெறும் 3 மாதங்கள் மட்டுமே பாலர்பள்ளிக்குச் சென்றுள்ளார். அதன்பின் குடும்ப வறுமையால் படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த 6 பிள்ளைகளின் தந்தை ஒரு மலேசியர் ஆவார். அவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். தற்போது, இந்த 6 பிள்ளைகளும் இந்தோனேசியப் பிரஜையான தங்களின் தாய் டெர்சே ஜூஷ் (Derce Jush, வயது 37) என்பவரால் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.
குடும்பச் செலவை ஈடுகட்ட, 16 வயது ஹைருல் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடையில் பகுதிநேர வேலை செய்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் இரு சிறு பிள்ளைகள் தெருவில் பலகாரங்களை (Kuih) விற்றுத் தாயாருக்கு உதவி வருகின்றனர். இக்குடும்பத்திற்குத் தேவையான நிதி மற்றும் இதர நல உதவிகளை வழங்கச் சிலாங்கூர் ஜகாத் வாரியமும் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.


















