வன்முறையை தூண்டும் தொலைக்காட்சி செய்தி, நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்

வன்முறையை தூண்டும் தொலைக்காட்சி செய்தி, நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டெல்லியில் ‘தப்லீக் ஜமாத்’ மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற வெளிநாடுகளைச் சேர்ந்த மதப் பிரச்சாரகர்கள் மூலம் நாடு முழுவதும் வைரஸ் பரவல் அதிகரித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

அந்த நேரத்தில் தப்லீக் ஜமாத் தொடர்பாக தொலைக்காட்சிகளில் எதிர்மறையான செய்திகள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியம் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பாப்டே கூறியதாவது:

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் செய்திகள், நிகழ்ச்சிகள் நடுநிலையாக இல்லை என்பது பிரச்சினை கிடையாது. ஆனால் சில நேரங்களில் தொலைக்காட்சி செய்திகள், நிகழ்ச்சிகளால் வன்முறை ஏற்படுகிறது.

பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு சமுதாயத்துக்கு எதிராக மற்றொரு சமுதாயத்தைத் தூண்டிவிடும் செய்திகள், நிகழ்ச்சிகள் தொடர்பாக மத்திய அரசு கண்டும் காணாமலும் இருப்பது ஏன்?

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டபோது இணைய சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால், வன்முறையைத் தூண்டும் வகையில் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகள், நிகழ்ச்சிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?

இது சட்டம், ஒழுங்கு பிரச்சினை. வன்முறை ஏற்படும் முன்பு அதை தடுப்பது நல்லது. சாலைகளில் தடுப்புகளை அமைப்பது, போலீஸ்காரர்கள் கையில் லத்தியை கொடுப்பதைவிட வன்முறையை தூண்டும் செய்திகள், நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது சிறந்தது. தவறிழைப்போர் மீது கேபிள் டிவி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here