கொரோனா ஊரடங்கு காலத்தில் சங்கீதம் பயின்று சாதித்த மாணவர்கள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீடுகளில் முடங்கிக் கிடந்த மாணவ, மாணவிகளை இசையோடு சங்கமிக்கச் செய்து சாதனை படைக்க வைத்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த இசை ஆசிரியர் ம.இசக்கியப்பன்(39).

தூத்துக்குடியில் சாரதா கலைக்கூடம் என்னும் இசைப்பள்ளியை கடந்த 12 ஆண்டுகளாக இவர் நடத்தி வருகிறார். இதன் மூலம் தேசிய அளவில் நடைபெறும் இசைப்போட்டிகளில் பங்கு பெறுவதற்கு மாணவ, மாணவிகளை தயார்படுத்தி வருகிறார். இதுவரை மூன்று முறை தேசிய இளையோர் திருவிழாவில் இப்பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றுள்ளனர்.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவசமாக இசைப் பயிற்சி அளித்து வருகிறார் இவர். தனது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்வதுடன், ஐந்தறிவு உயிர்களுக்கு உணவளித்தும் வருகிறார்.

ஏராளமான பாடல்களை சுயமாகப் பாடி இசையமைத்து வெளியிட்டுள்ள இவர், தமிழக அரசின் கலை வளர்மணி விருது மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் இதுவரை 13 விருதுகளை பெற்றுள்ளார். இவ்வாறு இவரது இசைப்பயணம் தொடர்ந்த நேரத்தில் கொரோனா என்னும் நோய் தொற்று பெரும் சவாலை ஏற்படுத்தியது. இந்தச் சவாலையும் இவர் சாதனையாக மாற்றியுள்ளார்.

தன்னிடம் கர்நாடக சங்கீதம் படித்த 20 மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்து அவர்களைப் பல மேடைகளில் பாட வைத்துள்ளார். அவர்கள் பாடிய விழிப்புணர்வு பாடல்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆன்லைனில் சங்கீத வகுப்பு

இது குறித்து இசக்கியப்பன் கூறியதாவது: கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கிய நேரத்தில் என்னிடம் கர்நாடக சங்கீதம் பயின்ற 20 மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் தினமும் காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சிறப்பு இசை வகுப்பு நடத்தினேன்.

கர்நாடக சங்கீதத்தில் சில சாதக முறைகளைப் புதிதாக உருவாக்கி பகல் நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு வீட்டுப் பாடமாக கொடுத்தேன். மேலும், இசை வினா- விடை, ராகங்களை கண்டுபிடிப்பதற்கான பயிற்சிகளையும் அளித்தேன். தினமும் காலை முதல் இரவு வரை இசையோடு தங்கள் பொழுதை செலவிட்டதால் அவர்களுக்கு மன அழுத்தம், தேவையில்லாத சிந்தனை போன்றவை ஏற்படவில்லை.

விழிப்புணர்வு பாடல்கள்

இந்த காலக்கட்டத்தில் நான் எழுதி இசையமைத்த கொரோனா விழிப்புணர்வு பாடலை எமது பள்ளி மாணவிகள் பாடி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டார். இந்தப் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கேரளாவில் கர்ப்பிணி யானை வெடி வைத்து கொல்லப்பட்ட போது, அது குறித்து பாடல் எழுதி இசையமைத்து எமது மாணவிகள் பாடினர். அப்பாடலை நெல்லை காவல் உதவி கண்காணிப்பாளர் அர்ஜுன் சரவணன் வெளியிட்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு 5 பாடல்களை எழுதி, எனது மாணவ, மாணவிகள் பாடினர். இந்த இசை குறுந்தகடை அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருநெல்வேலியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் எனது மாணவ, மாணவிகள் 5 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கடந்த 2 வாரங்களுக்கு முன் சென்னை லயோலா கல்லூரி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் நடந்த வீதி விருது வழங்கும் விழாவில் எனது மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற விழாவில் எனக்கும், அவர்களுக்கும் லயோலா கல்லூரி சார்பில் விருதும், சான்றிதழும் வழங்கினர்.

கடந்த வாரம் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள பிடபிள்யூடி செயலி குறித்த குறும்படத்தை தற்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டார்.

இந்த குறும்படத்தில் நான் எழுதி இசையமைத்த பாடலை எனது மாணவ, மாணவிகள் பாடினர். தற்போது பள்ளி பாடங்களுடன் இசை சம்பந்தப்பட்ட பாடங்களையும் அவர்கள் கற்று வருகின்றனர் என்றார் இவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here