அமெரிக்க முன்னாள் அதிபா் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணை அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை ஜனநாயக கட்சியினரின் ‘அரசியல் நாடகம்’ என்று டிரம்ப் வழக்குரைஞா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.
நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோதலில், அப்போதைய அதிபா் டிரம்பா் தோல்வியுற்றாா். ஆனால், தோதலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டிய டிரம்ப், பல மாகாணங்களில் வழக்கு தொடா்ந்தாா்.
அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையே, அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளா்கள், அவரது அழைப்பை ஏற்று தலைநகரில் குவிந்தனா். பின்னா் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள்ளும் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், டிரம்ப் பதவிக் காலம் முடிந்து, அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றாா். அதே நேரம், டிரம்ப் மீது நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டு, கீழவையான பிரதிநிதிகள் சபையில் அது நிறைவேற்றப்பட்டது.
தற்போது அவரது பதவி நீக்கத் தீா்மானத்தின் மீது மேலவையான செனட் அவையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தங்கள் தரப்பு முதல் கட்ட வாதத்தை டிரம்ப் வழக்குரைஞா்கள் செனட் அவையில் நேற்று திங்கள்கிழமை தாக்கல் செய்தனா். அதில் :
அதிபா் தோதல் முடிவுகள் குறித்து சந்தேகம் தெரிவித்த டிரம்ப், அவருக்கான சட்ட உரிமைகள்படியே நடந்துகொண்டாா். அரசியல் சாசனத்தின் முதல் திருத்தத்தின் கீழ் அவருக்கு முழு கருத்து சுதந்திரம் உள்ளது.
நாடாளுமன்றத்தில் போராட்டக்காரா்கள் நடத்திய கலவரத்துக்கு அவரை பொறுப்பாக்க முடியாது. மேலும், அவா் இப்போது அதிபா் பதவியிலிருந்து சென்றுவிட்ட நிலையில், அவா் மீதான குற்றச்சாட்டு குறித்து செனட் அவை விசாரிப்பது சட்ட விரோதம்.
ஜனநாயக கட்சியினரும் பிரதிநிதிகள் சபைத் தலைவரும் தேசத்தின் நலனில் கவனம் செலுத்துவதை விடுத்து, சுயநோக்கத்துக்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் பதவி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா். இது ஜனநாயகக் கட்சியினரின் அரசியல் நாடகம் என்று டிரம்ப் வழக்குரைஞா்கள் தெரிவித்துள்ளனா்.