ராணுவ ஆட்சி Vs மக்களாட்சி – ஒரு ஒப்பீடு

1962 முதல் 2011 வரை என சுமார் 49 ஆண்டுகளுக்கு மியான்மரை ராணுவம்தான் ஆட்சி செய்தது என்பதால், அது அந்த நாட்டு மக்களுக்கு புதிதல்ல. எனினும், கடந்த ஆறு ஆண்டுகளாக சுவாசித்து வந்த சுதந்திர காற்று ஒரே இரவில் முடிவுக்கு வந்தது என்பது, கண் தெரியாத, வாய் பேச முடியாத, காது கேட்காத ஒருவரை அடர்ந்த காட்டுக்குள் தனியாக அடைத்தது போன்றுள்ளதாக மக்கள் கருதுகிறார்கள்.

ஆட்சியின்போது, ‘உங்களுடன் பேச வேண்டும்’ என்று கூறி அழைத்து செல்லப்பட்ட பெரும்பாலானோரை பத்து அல்லது இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மீண்டும் பார்க்க முடியாத சூழல் 2011ஆம் ஆண்டுக்கு முன்புவரை நிலவி வந்ததாகவும், அது மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இயல்பு வாழ்க்கையை முடக்குவதாகவும் கூறுகின்றனர்.

மேலும், நீதித்துறை, கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ராணுவத்தின் ஆட்சியில் பாரபட்சம் காட்டப்பட்டதாகவும், அந்த நிலைமை படிப்படியாக மாறி வந்த வேளையில் அவை மீண்டும் கனவுபோல் மாறிவிட்டதாகவும் வேதனைப்படுகிறார் மியான்மர் தமிழரான சுந்தர்ராஜ்.

“எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கடந்த ஒரு வாரமாக தினமும் இரவு எட்டு மணிக்கு வீட்டிலுள்ள பாத்திரங்களைக் கொண்டு ஒலியெழுப்பி வந்தோம். மக்களாட்சிக்கு ஆதரவான இந்த ஒற்றுமை ஒலி, உணர்ச்சிவசப்பட்டு எங்களது கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.

ஆனால் ராணுவமோ, இதுபோன்று ஒலியை எழுப்புவதாக யாராவது ஒருவர் புகாரளித்தாலும், ஊரிலுள்ள அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவோம் என்று எச்சரிக்கை விடுக்கிறது. நாங்கள் எங்களது விருப்பு, வெறுப்பை அமைதியான வழியில் வெளிப்படுத்துவதற்கு உரிமை கிடையாதா?” என்று கேள்வியெழுப்பும் அவர், எனினும் மக்கள் ராணுவத்துக்கு அஞ்சாமல் தொடர்ந்து பாத்திரங்களை கொண்டு ஒலியெழுப்புவதைத் தொடர்வதாக கூறுகிறார்.

கொரோனா காலத்தில் இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் வழியே வர்த்தகம் மேற்கொள்ளவும், சந்தைப்படுத்தவும், கல்வி கற்கவும் என எண்ணற்ற புதுமைகளை வாழ்க்கையில் புகுத்திக்கொள்ள மக்கள் முயற்சித்து வந்த காலகட்டத்தில் தங்களது ஜனநாயக உரிமைகள் மீண்டும் பறிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

மியான்மரில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்த முதல் நாளன்று சில மணிநேரங்களுக்கு அமலில் இருந்த தொலைத்தொடர்பு கட்டுப்பாடுகள், நாட்கள் செல்லச் செல்ல விரிவடைந்து, ஒரு கட்டத்தில் நாடுமுழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது. ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களும் தடை செய்யப்பட்டன.

49 ஆண்டுகால ராணுவ ஆட்சியில் உரிமைகள் பறிக்கப்பட்டு, சொத்துகள் முடக்கப்பட்டு, கல்வி – வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டு வாழ்ந்த நாட்கள் இனி ஒருபோதும் திரும்ப கூடாது என்று ஒவ்வொரு நாளும் மியான்மர் மக்கள் வேண்டிக்கொள்வதாக கூறுகிறார் சுந்தர்ராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here